'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "எந்தப் பயிற்சியை நாம் சிறு வயதிலிருந்து பழகுகிறோமோ, அதை நீங்கள் செய்யலாம். இல்லையென்றால், அதற்குப் படிப்படியாக உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, இப்போது நான், நான்கு நாள் மாரத்தான் போட்டியில் பங்கேற்கச் செல்கிறேன் என்றால், அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பயிற்சி ஆரம்பித்து முதலில் 2 கி.மீ., 10 கி.மீ., எனப் படிப்படியாகச் சென்றால் தவறு கிடையாது. பயிற்சி எடுக்காமல் ஒரே நாளில் ஐந்து மணி நேரம் ஓடுவது தவறு. அதற்கு உடல் ஒத்துழைக்காது. கார்டியோ எக்சர்சைஸ் எல்லாம் தப்பும் கிடையாது. கார்டியோ எக்சர்சைஸ் பண்ணாமல் இருப்பது நல்லதும் கிடையாது.
நம்முடைய வாழ்நாள் என்று சொல்லுவது 80 வருடங்கள். 80 தான் லைஃப் ஸ்பான். இந்தியர்களின் சராசரி வயது என்று பார்த்தோமேயானால், 70 ஆக இருந்த நிலையில், கொரோனாவுக்கு பிறகு 68 ஆக குறைந்துள்ளது. 80 வயது வரை நீங்கள் வாழ்ந்தால், இயற்கை எதற்காக உங்களைப் படைத்து, நீங்கள் வளர்ந்து கொண்டு வருகிறீர்களோ, அந்த இலக்கை எட்டி விட்டீர்கள் என்று அர்த்தம். 100 முதல் 120 வயது வரைக் கூட மனிதர்கள் வாழ்வதைப் பார்க்கிறோம்.
நீடித்த ஆயுளை விரும்புபவர்கள் உடலைப் பேண வேண்டும். உடற்பயிற்சியுடன் சரியான ஸ்ட்ரெஸ் அளவை மற்றும் சரியான உணவு முறையைக் கையாள வேண்டும். அடுத்தவர்களுக்கு செய்கிற உதவிகள்தான் நம்மை சந்தோசப்படுத்தும் என்று நான் நினைக்கிறேன். எனவே, மற்றவர்களுக்கு எவ்வளவு நல்லது செய்ய முடியுமோ அவ்வளவு நல்லது செய்து கொண்டு வாழ்பவர்களுக்கு கண்டிப்பாக நீடித்த ஆயுள் வரும்.
அன்றாட வாழ்க்கையில் ஒரு மனிதன் எவ்வளவு தூரத்துக்கு மனிதர்களைத் தொட்டுச் செல்கிறானோ, அவன் ரொம்ப நாள் வாழ்கிறான். கடைக்குச் செல்வது, வழிப்பாதைகளில் உள்ள மனிதர்களைச் சந்தித்து கலந்துரையாடுவது, தபால்காரர்கள் உள்ளிட்ட மனிதர்களைச் சந்திப்பதுதான் தொட்டுச் செல்வது என்று கூறுகிறேன். மருத்துவர்களுக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாக இருப்பதால், ஆயுட்காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவு என்கிறார்கள்." இவ்வாறு மருத்துவர் தெரிவித்துள்ளார்.