தூக்கம் குறித்த பல்வேறு விஷயங்களை மனநல சிறப்பு மருத்துவர் பூர்ண சந்திரிகா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அனைவருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் தூக்கம். தூக்கம் குறித்து பல்வேறு காலகட்டங்களில் கவிஞர்கள் கவிதைகளை எழுதியுள்ளனர். தூக்கமின்மை பிரச்சனை, தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்து இன்று நிறைய விவாதிக்கப்படுகிறது. பலருக்கு தங்களுடைய வேலையால் இரவில் தூக்கம் பாதிக்கப்படும். தூக்கமின்மை என்பது ஒரு அறிகுறி தான். அதற்கான காரணங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். மொபைல் ஃபோன்களை அதிகம் பயன்படுத்துவதால் இன்று பலர் தூக்கத்தை இழக்கின்றனர்.
இரவு 10 மணிக்குள் மொபைல் ஃபோன் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நோயாளிகளுக்கு நாங்கள் அறிவுரை வழங்குவோம். தேர்வுக்கு முந்தைய நாள் கண் விழித்து படிக்கும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஆனால் தேர்வுக்கு முன் தான் நன்கு தூங்க வேண்டும். தூக்கத்தின் தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். சாப்பிட்ட பின்பு ஒரு பத்து நிமிடம் தூங்கி எழுந்தால் எனர்ஜி அதிகரிக்கும் என்பது அறிவியலில் நிறுவப்பட்ட ஒன்று. தூக்கம் வராமல் தவிப்பவர்கள் சில நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
படுக்கையை தூக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெட்ரூமில் தொலைக்காட்சியை வைக்க வேண்டாம். தூக்கம் வரவில்லை என்றால் சிறிது நேரம் புத்தகம் படிக்கலாம், தூக்கம் வரும்போது சென்று படுக்கலாம். மாலை நேரத்துக்குப் பிறகு காபி, டீ குடிப்பதைத் தவிர்க்கலாம். தூக்கத்துக்காக மதுவைப் பயன்படுத்துவது தவறு. சிலருக்கு கவலைக்கான அறிகுறியாகவும் தூக்கமின்மை இருக்கும். தூக்கத்துக்காக மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். போதைக்கு அடிமையாவது போல் மாத்திரைகளுக்கு அடிமையாகிவிடக் கூடாது. தேவைப்படும் வரை மட்டுமே அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.