முதுகு வலி வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அதே சமயத்தில் முதுகு வலி வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று விளக்குகிறார் முதுகெலும்பு மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். மரியானோ புருனோ.
இரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாட்டினாலும் முதுகு வலி ஏற்படும். இதற்கான சத்து மாத்திரைகளை நீங்கள் எடுத்துக்கொண்டாலே வலி குறையும். அதே வேளையில், முதுகெலும்பில் புற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் அதற்கான அறிகுறியாக முதுகு வலி இருக்கும். அந்தப் புற்றுநோய் நான்காம் படிநிலையில் இருக்கும் பட்சத்தில், அது உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே முதுகு வலியைக் கண்டு உடனே பயந்துவிடவும் கூடாது. அதை உதாசீனப்படுத்தி விடவும் கூடாது.
உட்காரும் முறையில் மாற்றம்; படுக்கையில் ஏற்படும் மாற்றம்; அதிகமான பளு தூக்குதல்; பிரயாணம் செய்தல்; நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாட்டில் ஈடுபடுதல் ஆகியவற்றாலும் முதுகு வலி ஏற்படலாம். மேற்சொன்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு சில மணி நேரம் கழித்து உங்களுக்கு முதுகு வலி ஏற்பட்டால் கவலைப்படத் தேவையில்லை. இவற்றில் ஈடுபடும்போது திடீரென்று வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
உங்களுடைய நடைமுறை மாற்றங்களினால் முதுகு வலி ஏற்பட்டிருந்தால், மீண்டும் பழைய நடைமுறைக்கு வந்து பாருங்கள். முதுகு வலி தானாகச் சரியாகிவிடும். எப்போது முதுகு வலி ஏற்பட்டது என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும். மொத்தத்தில், நீண்ட காலமாக முதுகு வலி இருந்தாலோ, திடீரென்று அதிகமான முதுகு வலி ஏற்பட்டாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். குறிப்பிட்ட காரணத்திற்காக முதுகு வலி ஏற்பட்டால் கவலைப்படாதீர்கள். முதுகு வலி என்பது சாதாரணமாகவும் வரலாம். புற்றுநோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை மட்டும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.