உடையின் முக்கியத்துவம் பற்றியும் அதனால் ஏற்படுகிற சருமப் பிரச்சனைகள் குறித்தும் சில கேள்விகளை மருத்துவர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்காக அவர் அளித்த விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.
நாம் அதிகம் பயன்படுத்துகிற ஜீன்ஸ் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற குளிர் அதிகமாக இருக்கும் நாடுகளில் உள் அரங்கங்கள் இல்லாது வெளி அரங்கங்களில் பணியாற்றுகிற சுரங்கப் பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிகிற பணியாளர்கள் பயன்படுத்துகிற துணி. அதை இந்தியா போன்ற சூடான தட்பவெப்ப நாடுகளில் குளிர்காலத்தைத் தாண்டியும் நாம் பயன்படுத்துகிறோம். அது நமக்கு நல்லதல்ல.
அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய நான்கு மாதங்களில் மட்டும் பயன்படுத்தலாம். மற்ற மாதத்தில் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை நீங்கள் ஏசி அறையில் தூங்குறீங்க, ஏசி அறையில் வேலை பாக்குறீங்க, ஏசி வைத்த மாலுக்கு போறீங்க, ஏசி தியேட்டரில் படம் பாக்குறீங்க, ஏசி காரில் போகிறீர்கள் என்றால் பயன்படுத்தலாம். ஏனெனில் உங்களுக்கு வியர்க்காது. ஜீன்ஸ் உங்களுக்கு ஏதுவாக இருக்கும். மற்றவர்களைப் பொறுத்தவரை நம்ம ஊருல எட்டு மாதமும் அடிக்கிற வெயிலுக்கு ஜீன்ஸ் போடுவது ரொம்ப தவறு.
ஜீன்ஸ் வியர்வையை உறிஞ்சும் தன்மை உடையது அல்ல. நம் வெயிலுக்கு அடிக்கடி வியர்க்கும். அதை கைக்குட்டை வைத்து துடைக்க வேண்டும். இல்லையெனில் உறிஞ்சும் தன்மை கொண்ட ஆடைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் அரிப்பு, படர்தாமரை போன்ற சருமப் பிரச்சனைகள் வரும். அவற்றிலிருந்து தப்பிக்க காட்டன் தான் பயன்படுத்த வேண்டும்.