Skip to main content

திருமண முறிவு சிக்கல் நிறைந்ததா? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 29/01/2024 | Edited on 01/02/2024
 DrRadhika Murugesan| Marriage | Divorce |

டைவர்ஸ் குறித்து சமூகத்தில் பல்வேறு விதமான பார்வைகள் உள்ளன. அதை எப்படி பார்க்க வேண்டும் என்ற உளவியல் பார்வையை நமக்கு மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.

திருமணத்தையும், டைவர்ஸையும் ஒரே தராசில் வைத்துத்தான் பார்க்க வேண்டும். திருமணமும் வளர்ச்சி சம்பந்தப்பட்டது தான், அதைப்போலத்தான் டைவர்ஸும். இதற்கு இன்னும் நாம் பக்குவமடைய வேண்டும். ஆய்வின் அடிப்படையில் உலக நாடுகளை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நம்முடைய டைவர்ஸ் செய்து கொள்ளும் அளவு என்பது குறைவானது தான்.

டைவர்ஸ்க்குப் பிறகு ஆண்களின் மன அழுத்தம் அதிகரிக்கிறது. புகை மற்றும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். அதே சமயத்தில் டைவர்ஸ் ஆன தம்பதியினரின் குழந்தைகளை விட, சண்டை போட்டுக் கொண்டே சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற தம்பதிகளின் குழந்தைகள் நிறைய மன அழுத்தத்தில் இருப்பார்கள்.

டைவர்ஸ் ஆன ஒருத்தரை இந்த சமூகம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பொறுத்துத்தான் அவர்களின் மனநிலை அமைகிறது. டைவர்ஸ் நடந்துவிட்டால் அவர்கள் அடுத்தக்கட்டத்திற்கு நகர முடியாமல் இருக்கிறார்கள். இந்த சமூக கட்டமைப்பு அவ்வளவு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. 

வர்க்க ரீதியில் இதைப் பார்த்தால் பணமிருக்கிற ஒருவர் டைவர்ஸ் செய்தால் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கிறது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ள ஒருவர் டைவர்ஸ் செய்தால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. ஏனெனில் பணம் உள்ளவர்கள் செய்கிற செயல்களை சமூகம் ஏற்றுக்கொள்கிறது. இந்த டைவர்ஸும் அப்படித்தான். 

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஒரு பெண்ணுக்கு அவளுடைய தந்தை சொன்னது என்னவென்றால், “காசில்லாமல் இருப்பதால், அட்ஜஸ்ட் பண்ணி சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும்” என்றிருக்கிறார். அப்படியான சூழல்தான் இங்கே நிலவுகிறது.

ஆணின் உறவை பெண் உதறித்தள்ளிச் செல்கிறாள் என்றால் ஆணுக்கு அது ஈகோ பிரச்சனையாகி சுமூகமான டைவர்ஸ் தர மறுக்கிறார். அதனால் தான் இங்கே திருமணத்தை மீறிய உறவுகள் பெருகி வருகிறது. டைவர்ஸ் செய்து கொண்டவர்களை சோகமாக பார்ப்பது தான் இங்கே நிலவி வருகிற சூழலாக உள்ளது. கல்யாணத்திற்கு வாழ்த்து சொல்கிறவர்கள், டைவர்ஸ் நடந்தால் அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள். டைவர்ஸ் நடந்தாலும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்கிற மனப்பக்குவத்திற்கு நாம் வர, நாட்கள் எடுத்துக் கொள்ளும்.