Skip to main content

“ஒரு காச நோயாளி 17 பேருக்கு பரப்பி விட முடியும்” - விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம்

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

 A TB patient can spread to 17 people! - explains Dr. Arunachalam

 

டிபி என ஆங்கிலத்தில் சொல்லப்படும் காசநோய் என்பது காலங்காலமாக இருந்து வரும் ஒரு நோய்  தான். இந்த நோய்க்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் என்னென்ன என்பது குறித்து டாக்டர். அருணாச்சலம்  நமக்கு விளக்குகிறார்.

 

டிபி நோய் முற்றிலுமாக இன்னும் ஒழியவில்லை என்பது வேதனையான ஒரு விஷயம். சமீபத்தில் நம்முடைய மருத்துவமனையில் 72 வயது முதியவர் ஒருவர் டிபி நோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அவருக்கு முதலில் கொடுக்கப்பட்ட மருந்துகள் ஒத்துக்கொள்ளவில்லை. இறுதியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

 

டிபி என்பது பொதுவாக நுரையீரலையே தாக்கும். ஆனால் உடலின் பல பாகங்களில் டிபி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு மாதத்தில் மூன்று டிபி நோயாளிகளை வெவ்வேறு வயதுகளில் நாங்கள் பார்த்துவிட்டோம். காசநோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரால் அந்த நோயை 17 பேருக்கு பரப்ப முடியும். அந்த அளவிற்கு வீரியம் மிக்கது. இந்த நோயை விரைவில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்துடைய, மருத்துவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. 

 

ஒருநாள் இரவு சுயநினைவின்றி ஒருவரை நம்மிடம் அழைத்து வந்தனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையில் அவருக்கு ரத்தம் குளம் போல தேங்கியிருந்தது. அவருக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்டிருந்தது. ரத்தக் கொதிப்பை கவனிக்காமல் விட்டதால் வந்த பாதிப்பு அது. மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர் அவர். 

 

அறிகுறிகளை ஆரம்பத்திலேயே அறிந்து சிகிச்சை எடுக்காமல் விட்டால் பின்னாளில் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். நோய்க்கான அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் அளிக்கும் விழிப்புணர்வு வீடியோக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். உடல் பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் மிக மிக அவசியம்.