நம்மில் பெரும்பாலோனோர் எதற்கு எடுத்தாலும் அடுத்தவரிடம் யோசனைக் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் .அப்படி அடிக்கடி யோசனைக் கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது .அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது .முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக யோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும். அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். தப்பில்லை. ஆனால் அதனை அப்படியே ஜெராக்ஸ் காப்பி போலக் கடைப்பிடித்தல் கூடாது. அந்த ஆலோசனைகளை உங்கள் மனதில் ஊறப்போட வேண்டும். அதில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று யோசிக்க வேண்டும். சில யோசனைகள் உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் மனோ நிலைக்கும், உங்கள் நடவடிக்கைக்கும், உங்கள் பழகும் விதத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும். அவற்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.வேறு சில யோசனைகள் நல்லதாகவும், கடைப்பிடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனாலும் உங்கள் மனோபாவத்திற்கு பொருந்தாததாக இருக்கும். எனவே அவற்றை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.
உங்கள் வலது பாதத்தை முன்னோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியும் உங்கள் சொந்த யோசனைப்படியே இருக்க வேண்டும். வயதில் பெரியவர் சொன்னால், அனுபவத்தில் சிறந்தவர் சொன்னார், அறிவில் சிறந்தவர் சொன்னார் என்றெல்லாம் கூறி, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு, எந்தவொரு அடியையும் எடுத்து வைக்கக் கூடாது. சிலர் வாகனங்களை ஓட்டும்போது ஹாரன் அடிக்கவே மாட்டார்கள். அடிக்கடி அடித்தால் பேட்டரி தளர்ந்து போய்விடும் என்பதுதான் அதற்குக் காரணம். அப்படித்தான் சிலர் தங்கள் மூளையையும் அதிகமாகப் பயன்படுத்தவே மாட்டார்கள். அவ்வாறு செய்தால் உடம்பில் எந்த பேட்டரி தளர்ந்து போகும்?
தீட்டத் தீட்டத்தான் வைரம் மிளிரும். அதேபோல பயன்படுத்த பயன்படுத்தத்தான் உங்கள் மூளையும் சிறப்பாக இயங்கும். இப்போது எங்கோ படித்த குட்டிக்கதை ஒன்று நினைவிற்கு வருகிறது.நிறுவனம் ஒன்றில் உயரதிகாரி பதவியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒருவர் அன்று பொறுப்பேற்க வந்தார். ஏற்கெனவே அந்தப் பொறுப்பில் இருந்தவர் வேறொரு நிறுவனத்தில் வாய்ப்பு கிடைத்து செல்ல இருந்தார். அவரிடம் புதிதாகப் பொறுப்பேற்க இருந்தவர், திறமையான நிர்வாகம் செய்திட ஆலோசனைகள் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.பழைய அதிகாரியோ மூன்று சீட்டுக்களை மடித்து அவரிடம் கொடுத்து, பிரச்சனைகள் வரும்போது வரிசைப்படி ஒவ்வொரு சீட்டாகப் பிரித்துப் பார்க்கச் சொன்னார்.மகிழ்ச்சியுடன் அந்தச் சீட்டுக்களை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டார் அவர்.நிறுவனத்தின் உயரதிகாரியாகப் பொறுப்பேற்று ஒருசில மாதங்களே கடந்த நிலையில் ஊழியர்கள் மத்தியில் ஏதோ ஒரு பிரச்சனை வெடித்தது. நெருக்கடி அதிகமானது இவருக்கு.அப்போது பழைய அதிகாரி கொடுத்திருந்த சீட்டு நினைவுக்கு வந்தது. அதில் முதல் சீட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தார்.‘நான் இந்த நிறுவனத்திற்குப் புதியவன். எனவே சிறிது அவகாசம் கொடுக்கவும்’ என்று எழுதப்பட்டிருந்தது.ஊழியர்களிடம் அப்படியே கூறினார் அதிகாரி. அவர்களும், ‘இவர் சொல்வதும் உண்மைதான். சில மாதங்கள் பொறுத்திருப்போம்’ என்று கலைந்து சென்றுவிட்டனர்.ஒரு ஆண்டு கடந்த நிலையில் மீண்டும் ஊழியர்களின் பிரச்சனை தலை தூக்கியது. இவருக்கு அது பெரும் தலைவலியானது. எனவே இரண்டாவது சீட்டைப் பிரித்துப் பார்த்தார்.‘முன்பு உயரதிகாரிகளாய் இருந்தவர்களைக் குறை சொல்லி அவர்கள் மீது பழியைப் போடு’ என்று எழுதப்பட்டிருந்தது.இதைப் படித்ததும் ரொம்பவும் உற்சாகம் அடைந்தார். ஊழியர் களிடம் அப்படியே பழைய அதிகாரிகள் ஒழுங்காக நிர்வாகம் செய்யா மல் போனதுதான் இவ்வளவுக்கும் காரணம் என்றும், இன்னும் கால அவகாசம் தந்தால் அனைத்தையும் சீர்செய்துவிடுவேன் என்றும் கூறினார்.ஊழியர்களும் அவரது கூற்றை ஏற்றுக்கொண்டனர். எனவே இன்னும் சிறிது காலம் அவகாசம் கொடுக்க இசைந்தனர்.
அப்படியே இன்னும் ஒரு ஆண்டு கடந்தது. இவ்வாறு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் ஊழியர்கள் மீண்டும் ‘வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதை’யாக பிரச்சனையைக் கையில் எடுத்தனர்.உடனே பரபரப்பாக மூன்றாவது சீட்டை எடுத்துப் பிரித்துப் பார்த்தார். அதில், ‘உனக்கு அடுத்து வருபவர்களுக்காக இதேபோல மூன்று சீட்டுக்களைத் தயார் செய்து வை’ என்று எழுதப்பட்டிருந்தது.ஒரு நிர்வாகத்தைப் பொறுப்பாக நடத்துகிறவர் தனது மூளை யைக் கசக்கி யோசிக்காமல், தனது அறிவை மழுங்கச் செய்யாமல், சுயமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும்.அவ்வாறின்றி யாரோ கூறியதை அப்படியே கடைப்பிடித்தால் அவர்களது நிலை சிறிது காலத்திற்கு மட்டுமே பிரச்சனைகள் இல்லாமல் போகும். அப்புறம் கிடுகிடு பள்ளத்தில் விழுந்து எழுந்திருக்கவே முடியாதநிலை வந்துவிடும்.எனவே மனிதர்கள் ஒவ்வொருவரும் சுயமாக சிந்திக்கப் பழக வேண்டும். அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடிப் பொழுதையும் அவர்களே தீர்மானிக்க வேண்டும். அதுவே அவர்களின் முன்னேற்றத் திற்கு உறுதுணையாக இருக்கும்.