Skip to main content

இவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர்! - 5 நிமிட எனர்ஜி கதை 

Published on 12/11/2018 | Edited on 12/11/2018

தஞ்சாவூரில் இருக்கும் பொய்யுண்டார் குடிகாடு என்னும் கிராமத்தைவிட்டு சென்னைக்கு பிழைப்புத் தேடி இளைஞர் ஒருவர் செல்கிறார். ”இனிமேல் இந்த கிராமத்திற்கு வந்தால் மெர்சிடிஸ் பென்ஸ் கார் வாங்கி அதில்தான் வருவேன்” என்று மனதுக்குள் போட்ட சபதத்துடன் கிளம்புகிறார்.
 

ravivarman



சென்னைக்கு வேலை தேடிக் கிளம்பும் போது எல்லோரும் எடுத்துக்கொள்ளும் சபதம் போன்றுதான் அதுவும் இருந்தது. பின் சென்னைக்கு வந்து பெரும்பாலானோர் படும் கஷ்டத்தில் ஊரிலிருந்து வரும்போது என்ன சபதம் போட்டோம் என்பதையே மறந்துவிடுவோம். அவரும் சென்னைக்கு வந்து அசிஸ்டண்ட் கேமராமேனாக சேர்ந்துகொண்டு ரூமில் படுக்க இடம் இல்லாமல், ரயில் தண்டவாளத்திற்கு அருகில் படுத்து, ரயில்வே பிளாட்பாரத்தில் படுத்து, ஜெமினி மேம்பாலத்திற்குக் கீழே படுத்து... என இப்படி எல்லாம் காலத்தை ஓட்டியிருக்கிறார்.

முதலில் வேறு வேலைகள், பின் தான் ஆசைப்பட்ட திரைத்துறையில் சின்னச் சின்ன படங்களில் ஒளிப்பதிவு டீமில் உதவியாளர் வேலை, உதவி ஒளிப்பதிவாளர் வேலை என்று அவ்வப்போது வேலை கிடைத்தாலும், வாழத் தேவையான சம்பளம் கிடைக்கவில்லை. திருமணம் செய்துகொண்ட பின்னும் இந்த நிலைமை தொடர்ந்தது. வறுமையால் பல வருடங்கள் கண்ட சினிமா கனவு பழிக்காமல் சென்றுவிடுமோ என்ற பயத்தில் ஒருமுறை தன்னுடைய மனைவியிடம், ”பேங்க் பேலன்ஸ் 5000 இருக்கு, 2000 தனியா எடுத்து வச்சுக்க, மீதி இருக்க 3000 ரூபாய செலவு பண்ணுவோம், எப்போ அந்த பணம் முழுசா தீர்ந்துடுதோ அப்போ நம்ப இரண்டு பேரும் சூஸைடு பண்ணிப்போம்... என்னால இனிமேல் அசிஸ்டண்டா போராட முடியாது...” என்று கூறும் அளவுக்கு நிலைமை போனது. இது ஒரு காலகட்டம்.

 

ravivarman sanjay leela bansali



இன்னொரு காலகட்டம்... ஹிந்தி நட்சத்திரங்களில் ஒருவரான ரன்பீர் கபூர், இந்தியாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் ராஜ்குமார் ஹிரானியிடம், ”அவரையே நம் படத்தின் கேமராமேனாகப் போடலாம், எனக்கு அவர்மீது பெரும் அளவில் நம்பிக்கை இருக்கிறது, வேண்டுமானால் அவர் வேலை செய்த படங்களை எடுத்துப்பாருங்கள்” என்று மிகப்பெரும் ப்ராஜெக்ட்டான 'சஞ்சு'வுக்கு இவர் பெயரை உறுதியாகப் பரிந்துரை செய்கிறார். ஒரு படத்தில் அவரது திறமையைப் பார்த்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் அவரது படங்களுக்கு இவரையே பரிந்துரைக்கிறார் ரன்பீர் கபூர். இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இவரது லைட்டிங்கை புகழ்ந்து தள்ளுகிறார். இன்னோரு பக்கம், இந்திய சினிமாவின் பெரும் படைப்பாளி என்று சொல்லப்படும் மணிரத்னம், ”ஹேய்... நேற்று அந்த சினிமா பார்த்தேன். அதுல இந்த ஷாட் செமையா இருந்தது... சரி நீ ஃப்ரீயா இருந்தா ஆபிஸ் வா...” என்று இவருக்கு SMS அனுப்புகிறார். லென்ஸ் தயாரிக்கும் ஒரு நிறுவனம் இந்த கேமராமேனுக்காகவே ஒரு சிறப்பு லென்ஸை வடிவமைத்து செய்துதருகிறது. தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட்டுக்குச் சென்று கலக்கும் ஒளிப்பதிவாளர்களில் தற்போது பி.சி.ஸ்ரீராம், ரவி.கே.சந்திரன் போன்ற பெயர்களெல்லாம் பேசப்படுவது குறைந்து ரவிவர்மன் என்கிற பெயர் ஒலிக்கிறது. தஞ்சாவூரில் பிறந்து சென்னைக்கு சினிமா கனவுடன் ஓடிவந்தார் என்று மேலே சொல்லிக்கொண்டிருந்தோமே, மூவாயிரம் பணம் தீர்ந்துவிட்டால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று தன் மனைவியிடம் சொன்னாரே... அவர் தான் இந்த ரவி வர்மன்.

இந்த இரண்டு காலகட்டங்களுக்கும் இடையே நிகழ்ந்தது என்ன? விளிம்பிலிருந்த தன்னம்பிக்கையை முழுதாக விட்டுவிடாமல் பற்றிக்கொண்ட அவருக்குக் கிடைத்த மலையாளப்பட வாய்ப்பு, அதை சிறப்பாகப் பயன்படுத்தியதால் அடுத்தடுத்த வாய்ப்புகள், பின் கிட்டத்தட்ட முப்பது படங்கள். பாலிவுட் வரை பல படங்கள். எப்படி நடந்தது? கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமென்பதால் அந்த மலையாளப்பட வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. சரி, முயற்சிப்போமே என்று கிளம்பிச் சென்றார். அங்கு பட்ஜெட் காரணமாக, வழக்கமான சினிமாவுக்குக் கிடைக்கும் லைட்கள், கிரேன் போன்ற எந்த வசதிகளும் கிடைக்கவில்லை. அந்த வசதிக்குறைவையே அவர் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். இயற்கையான ஒளியில் படம்பிடித்தார், க்ரேனுக்கு பதிலாக மாட்டு வண்டியில் கேமராவை வைத்து படம்பிடித்தார். இது அத்தனையும் சிறந்த ஒளிப்பதிவாக உருவாகியது. ஒவ்வொரு படத்திலும் இப்படி சோதனை முயற்சி செய்து பார்த்தார்.

 

glare scene



அதுவரை சினிமாவில், காட்சியில் 'க்ளேர்' அடித்தால் அதை தவிர்ப்பார்கள். கேமரா லென்ஸில் சூரிய ஒளியை வாங்கினால் காட்சி முழுவதும் எரிந்ததுபோன்று தெரியும். அப்படியான ஒரு காட்சியை எடுக்கவே மாட்டார்கள். அது விதிமீறல் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், ரவி வர்மனோ அப்படியான காட்சியில்தான் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார். 'நிஜ வாழ்க்கையில் 'க்ளேர்' அடித்தால் நம் கண்கள் அதை மறைப்பதில்லையே, பின் ஏன் சினிமாவில் அதை மறைக்கவேண்டும்' என்று அதையும் சேர்த்தே படம் பிடித்தார். பர்ஃபி என்னும் படம் முழுவதும் சூரிய ஒளியை லென்ஸில் வாங்கிக்கொண்டுதான் காட்சிப்படுத்தியிருப்பார். அந்தக் காட்சிகளைப் பார்க்க, அழகிய ஓவியம் போன்று இருக்கும். அந்த ஒளி காட்சியை இன்னும் அழகாக்கியது. இவர் அப்படி செய்த 'பர்ஃபி' திரைப்படம் ஒளிப்பதிவுக்காகப் பெரிதும் பாராட்டப்பட்டது. பல விருதுகளையும் பெற்றது.

இவர் ஒரு பேட்டியில் பகிர்ந்த விஷயம் இது. சென்னை வந்த புதிதில் சேர்ந்த ஒரு வேலையின் மூலமாகக் கிடைத்த முதல் சம்பளம் 150 ரூபாய். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு போட்டுக்கொள்ள உடை வாங்கலாம் என்று சென்ட்ரல் அருகே உள்ள மூர் மார்க்கெட்டுக்குப் போனவர், வழியில் ஒரு கடையில் கேமராவைப் பார்த்துவிட்டு, அதை எண்ணூறு ரூபாயிலிருந்து குறைத்துப் பேசி 145 ரூபாய்க்கு வாங்கினார். 5 ரூபாய் அவரது சாப்பாட்டுக்கு. பின், அடுத்த மாத சம்பளத்தில் ஒரு ரெபிடெக்ஸ் புத்தகமும், கேமரா பற்றிய ஒரு புத்தகமும் வாங்கினார். கேமரா பற்றிய புத்தகம், எப்படி கேமராவை இயக்குவது என்று படிக்க. அது ஆங்கிலத்தில் இருந்ததால் அதைப் புரிந்துகொள்ள ரெபிடெக்ஸ் புத்தகம். இப்படி, எந்த நிலையில் இருந்த போதும் அவரது சிந்தனை தன் பெரிய கனவைப் பற்றியே இருந்தது. அதுபோல, எந்தக் குறையும் அவருக்குத் தடையாக இல்லை. இன்றும் அவர் இங்கிலிஷ் சரளமாகப் பேசுபவர் இல்லை. ஆனால், அதுபற்றிய கவலை அவருக்கு இருந்ததே இல்லை. எந்த மேடையிலும், நேர்காணலிலும் தைரியமாகப் பேசுவார்.

 

maniratnam ravi varman



ஒளிப்பதிவாளராகும் கனவு நிறைவேறிய பின்னும் அவரது கனவுகள் தீர்ந்துவிடவில்லை. அவரது அடுத்த கனவு இயக்குனர் மணிரத்னத்தின் படத்தில் பணிபுரிவது. அந்தக் கனவை அடைய கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தினார். மணிரத்னம் தயாரிப்பில் 'ஃபைவ் ஸ்டார்' படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது, அதை சிறப்பாகச் செய்து அவரது கவனத்தை ஈர்த்தார். 'உங்க ஏஸ்தடிக் சென்ஸ் நல்லாருக்கு' என்று மணிரத்னம் கூறியபோது ரவிவர்மனுக்கு அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. பின் மணிரத்னத்தை சந்திக்க ஒரு வாய்ப்பு கேட்டு இரண்டு மாதங்கள் காத்திருந்து அவரை சந்தித்து, தன் விருப்பத்தைத் தெரிவித்தார். பின்னர், 'பர்ஃபி' படத்தைப் பார்த்துவிட்டு மணிரத்னம் தன்னை அழைக்கவேண்டுமென்ற தீர்மானத்தோடு அந்தப் படத்தில் பணியாற்றினார். இவர் நினைத்தது போலவே 'பர்ஃபி' படம் இவரது கனவை நிரைவேற்றியது. 'காற்று வெளியிடை' படத்தில் பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. 'பர்ஃபி' கூடுதலாக இவருக்கு சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்றும் வாய்ப்பையும் கொடுத்தது.

இப்படி மணிரத்னத்தை சந்திப்பதையே பெரிய விசயமாகக் கொண்டிருந்த ஒருவருக்கு மணிரத்னம் அவரை அடிக்கடி அழைக்கும் அளவுக்கு நிலை உயர்ந்திருக்கிறது. ஜெமினி பாலத்தின் கீழ் படுத்திருந்தவர் இன்று நாடு நாடாகப் பறந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமே பேசத்தெரிந்தவர் பல மொழிகளில் பணியாற்றுகிறார். இந்தியாவின் மிகப்பெரும் இயக்குனர்கள் இவருக்காகக் காத்திருக்கின்றனர். இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பல. அதில் முக்கியமானவை... 'இயல்பாக நமக்குக் கிடைக்காத எதையும் தடையாகக் கருதக்கூடாது'. இவர் இங்கிலிஷ் தெரியவில்லை என்பதிலிருந்து, சரியான வசதி கிடைக்கவில்லை என்பது வரை எதையும் தடையாகக் கருதவில்லை. கனவு காண்பதை எந்த நிலையிலும் நிறுத்தக்கூடாது, அதுவே நம்மை மேலும் மேலும் உயர்த்தும். புதிய முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும், ஏற்கனவே பலர் செய்ததையே செய்வது நம்மை அடையாளப்படுத்தாது.

"நான் சின்ன வயசுல ஸ்கூலுக்கு ஏழு கிலோமீட்டர் நடந்து போவேன். நடக்குற வழியெல்லாம் எதிர்காலத்தைப் பற்றி கனவு கண்டுக்கிட்டேதான் போவேன். பெருசா வரணும் என்ற கனவுதான் இவ்வளவு தூரம் என்னைக் கொண்டு வந்துருக்கு" என்று ஒரு பேட்டியில் கூறினார் ரவிவர்மன். எல்லாம் சரி, மெர்சிடிஸ் பென்ஸ் வாங்கிட்டு ஊருக்குப் போனாரா இவர்? வாங்கவில்லை. அதைவிட விலைமதிப்பான கார்களை வாங்க முடியும் இவரால். அதை விட பெரிய கனவை நோக்கிப் போகிறார் இப்போது. கனவுகளை நோக்கிக் கிளம்பலாமா?