'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "காசநோய்க்கு நிறைய மருந்துகள் இருக்கின்றது. ஒருவருக்கு காசநோய் வந்தால் 17 பேருக்குப் பரவக் கூடிய வாய்ப்பு உள்ளது. இப்போதும் மருத்துவமனைகளில் மாதத்திற்கு இரண்டு பேருக்கு காசநோய் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. அவர்கள் மருந்து மாத்திரைகளைச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். சுமார் ஆறு மாத காலத்திற்கு மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். மாத்திரைகளைச் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு வாரத்துக்கு மேல் இருமல் இருந்தால் அது காசநோயாக இருக்கலாம். நோயாளிகள் இப்போதும் கூட சர்வ சாதாரணமாக இரண்டு மாதங்கள் கழித்து வந்து சொல்லும் போது பயமாக இருக்கிறது. காசநோய் முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நோய். காசநோய் நுரையீரலை மட்டும் தாக்கும் என்பதில்லை. சிறுநீர்ப் பாதையைத் தாக்கலாம்; எலும்பைத் தாக்கலாம்; தண்டுவடத்தைத் தாக்கலாம்; மூளையைத் தாக்கலாம். தொடர்ந்து இருக்கக் கூடிய இருமல், பசியின்மை, உடல் எடை குறைவது, அடிக்கடி ஜுரம் வருவது ஆகியவை காசநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.
துப்பும் எச்சில், சளியில் ரத்தம் இருந்தால் கண்டிப்பாக காசநோய் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். பரிசோதனை செய்து, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இருமலை நிறுத்தும் வரை தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காசநோய் கண்டறியப்பட்டால், அவர்களை அவர்களது குடும்பத்தினர் கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.