நோய் வராமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. மகத்தான மருந்துகளை நம் அஞ்சறைப் பெட்டிக்குள் வைத்துக்கொண்டு பதிலை வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். உணவே மருந்து என்கின்ற அடிப்படையில் நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவ நலன்கள் குறித்து சித்த மருத்துவர் டாக்டர். அருண் விளக்குகிறார்.
இதைச் செய்தால் எனக்கு நோயே வராது என்பது போன்ற மருந்தைப் பரிந்துரைக்கும்படி பலர் கேட்கின்றனர். அப்படிப்பட்ட மருந்துகள் இஞ்சி, சுக்கு, கடுக்காய். இவற்றை நாம் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் உடலை இளமையாக வைத்திருக்கும். இஞ்சியைத் தோல் சீவி, கீற்று கீற்றாக நறுக்கி, தேனில் ஊற வைத்து சாப்பிட்டது தான் தன் இளமையின் ரகசியம் என்று ஒரு சித்தர் தன் மாணவர்களிடம் கூறினார். இஞ்சியை எப்போதும் தோலை நீக்கிவிட்டே பயன்படுத்த வேண்டும். சித்தர் கூறியபடி இஞ்சியை சாப்பிட்டு வந்தால் முடி நரைத்தல், தோல் சுருக்கம் ஆகியவை ஏற்படாது. நம்முடைய செல்களை இளமையாக வைத்திருக்கும் தன்மை இஞ்சிக்கு இருக்கிறது. இஞ்சியின் மூலம் மன அழுத்தமும் குறைகிறது. வாரம் ஒரு முறை காலை நேரத்தில் இஞ்சியைத் தட்டி, சாறு பிழிந்து, சூடான கரண்டியில் ஊற்றி, தேன் கலந்து சாப்பிடலாம். வயிறை சுத்தம் செய்யக்கூடிய தன்மை இதற்கு இருக்கிறது. இதன் மூலம் முகப்பொலிவு ஏற்படும்.
மதிய நேரத்தில் சுக்கை நாம் பயன்படுத்தலாம். உடல் சத்துக்களை இழந்து நமக்கு வறட்சி ஏற்படும் மதிய நேரத்தில் சுக்கு நமக்குப் பயன்படும். சுக்கைப் பொடி செய்து, கொத்தமல்லித் தூள் சேர்த்து, தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பானமாக அருந்தலாம். இதனால் உடலில் வாயு சேராது. செரிமானக் கோளாறு ஏற்படாது. கடுக்காயை இரவு நேரத்தில் பயன்படுத்த வேண்டும். வயதானவர்களுக்கே பெரும்பாலும் இது தேவைப்படும். மலத்தை இலகுவாக்கும் தன்மை கடுக்காய்க்கு இருக்கிறது. எனவே மலச்சிக்கல் இருப்பவர்கள் இதைப் பயன்படுத்தலாம். மற்றவர்கள் இதை அவ்வப்போது பயன்படுத்தலாம். நோய் எதிர்ப்பு தன்மை இதில் இருக்கிறது. உப்பைத் தவிர அனைத்து சுவைகளும் இதில் இருக்கிறது. உடலைத் தேற்றக்கூடிய மருந்து கடுக்காய். மேற்சொன்ன மூன்று மருந்துகளுமே நம்மை இளமையாக வைத்திருக்கும் தன்மையுடையவை. நோயில்லாமல் வாழ்வதற்கான அடிப்படையான மருந்துகள் இவை.
ஏற்கனவே நோய்களுக்கான மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்பவரானால், மருத்துவரின் ஆலோசனையோடு இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வெந்நீரில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு நல்லது. சமைக்கப்படாத பழைய உணவை எந்தக் காரணத்திற்காகவும் உண்ண வேண்டாம். கருணைக் கிழங்கைத் தவிர மற்றவை உடலுக்கு ஏற்ற கிழங்குகள் அல்ல. இரவு நேரத்தில் பூக்களை முகர்ந்து பார்க்க வேண்டாம். கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் அதில் இருப்பதால் சுவாசத் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புண்டு.இவற்றைப் பின்பற்ற நாம் முயற்சி செய்தால் பல்வேறு நோய்களிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.