நம்மில் பலருக்கு இருக்கக் கூடிய தீய எண்ணங்களில் ஒன்று அடுத்தவர்க்கு எதாவது கெடுதல் நடந்தால் அதைப் பார்த்து மிகவும் சந்தோசம் அடைவார்கள்.‘கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது பொது மொழி. இதனை சாதாரணமாக நினைத்தால் அது தவறு.‘போங்கடா வேலையில்லை இவங்களுக்கு’ என்று இதனைக் கேவலமாக நினைப்பவர்களும் உண்டு. ஆனால் இது சத்திய வாக்கு என்பதை அனுபவம்தான் அவர்களுக்கு உணர்த்தும்.
ஒரு ஊரில் சாமியார் ஒருவர் வசித்து வந்தார். அவர் எப்போதும் தியானம் செய்து கொண்டே இருந்தார். அங்குள்ள வீடுகளில் பிச்சை எடுத்து ஒருவேளை மட்டும் உணவருந்தி வந்தார்.ஒருநாள் பிச்சைக் கேட்டு மூதாட்டி ஒருவர் வீட்டின் முன் நின்றிருந்தபோது அந்த மூதாட்டியின் ஒரே மகன் நன்றாகக் குடித்து விட்டு அவளை அடித்தும் உதைத்தும் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.இதைப் பார்த்த சாமியார், அவனைத் தடுத்து நிறுத்தி மூதாட்டியைக் காப்பாற்றினார். அத்துடன் கோபத்தில், ‘‘பெற்ற தாயையே உதைத்த நீ நாசமாகப் போவாய்’’ என்று சாபம் வேறு கொடுத்தார்.தன்னை மகன் அடித்துத் துன்புறுத்தியதைக்கூடப் பெரிதாக நினைக்காத அந்த மூதாட்டி, மகனை சாமியார் சபித்ததால் கடும் கோபம் அடைந்தாள்.அன்று இரவு முழுவதும் அவளுக்குத் தூக்கமே வரவில்லை. சாமியாரின் சாபம் பலித்து தனது மகனுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கலவரம் அடைந்தாள்.
தான் பாசத்தோடு வளர்த்த தன் ஒரே செல்ல மகனை இப்படி சபித்து விட்டாரே என்று நினைத்தாள். காலையில் எழுந்தபோது கவலையும், சோகமும் மறைந்து சாமியார் மீது இப்போது ஆத்திரம் ஏற்பட்டது. ‘இந்த சாமியார் உயிரோடு இருந்தால்தானே இப்படி சாபம் விடுவார். அவரைத் தீர்த்துக் கட்டிவிட்டால் என் மகனுக்கு ஒன்றும் ஆகாமல் காப்பாற்றி விடலாம்’ என்ற எண்ணம் எழுந்தது.தனது குடிகார மகன் மீதான பாசம் காரணமாக அவனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தை அவளுக்கு ஏற்படுத்தியது.அன்று வழக்கம்போல பிச்சைக் கேட்டு வந்தார் சாமியார். அவர் மீது கடும் கோபத்தில் இருந்த மூதாட்டி, சோற்றில் விஷத்தைக் கலந்து அதனை சாமியாருக்குக் கொடுத்துவிட்டாள். சாமியாரும் அதை வாங்கிக் கொண்டு தனது இடத்திற்குச் சென்றார்.அப்போது நன்றாகக் குடித்துவிட்டு அங்கே வந்த மூதாட்டியின் மகன் சாமியாரிடம், ‘‘நன்றாகப் பசிக்கிறது. சாப்பாடு இருக்கிறதா?’’ என்று கேட்டான்.
இவரது அனுமதியைக்கூடப் பெறாமல் பாத்திரத்தில் இருந்த உணவை எடுத்து விழுங்கத் தொடங்கினான். கொஞ்சம் கூட மீதம் வைக்காமல் பாத்திரத்தில் இருந்த உணவு முழுவதையும் அவனே தின்று தீர்த்தான்.சற்று நேரத்தில் மயங்கிச் சாய்ந்தவன் பின்னர் இறந்து போய் விட்டான். பிறருக்குக் கேடு நினைத்தால் அது நிச்சயமாக நமக்கே வந்து சேரும். இதனைக் கதையாக மட்டும் நினைக்கக்கூடாது. உண்மை நிகழ்வுகளும் நிச்சயமாக இப்படித்தான் அமையும்.