தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளும் செல்ப் ஹார்ம் நோய் என்றால் என்ன? அது எப்படியான மனச் சிக்கலை உருவாக்கும் என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.
பொதுவாக மன நல மருத்துவரிடம் தற்கொலை எண்ணத்திற்கு தீர்வு கேட்டுத்தான் வருவார்கள். ஆனால் அதுமட்டுமில்லாமல் தன்னைத் தானே வருத்திக் கொள்ளுதல், தற்கொலை அல்லாமல் ஆனால் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளுமளவு செல்லும் வகையை பற்றி பேசலாம். இதுபோன்று செய்யும்போது அவர்கள் ஏதோ ஒரு செய்தியை தான் சொல்ல வருகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் மன வலியை வெளிக்காட்ட முடியாமல், உடல் வழியாக உணர்த்துவார்கள். உதாரணத்திற்கு தலை வலிக்கும் போது தைலம் தடவுவதால் வலி சரி ஆவதில்லை. ஆனால் வலி கொடுக்கும் அந்த உணர்வை தைலத்தை தடவி வேறொரு உணர்வால் அதை மறைக்க செய்வதை போல இந்த சுய வருத்தலை பார்க்கலாம்.
இதுபோன்ற பழக்கம் எல்லா மதம் சார்ந்த முறையில் கூட நிறைய இருக்கிறது. தீ மிதிப்பது, அலகு குத்திக் கொள்ளுவது, தன்னைத் தானே துன்புறுத்திக் கொள்வது போன்றவை இருந்து வருகிறது. இந்த முறைகள் எல்லாமே கடவுளிடம் தன்னுடைய பிரச்சனை, வலிகளுக்கு நிவாரணம் கேட்பது போன்றவை தான். செல்ப் ஹார்மில் பெரும்பாலானவை கையை குத்திக் கொள்வது, சுவரை குத்திக் கொள்வது போன்றவை இருக்கும். ஒருவர் மீதோ, சமூகம் மீதோ, ஏதோ ஒரு அளவுமீறின கோவத்தில் சிலர் அதிகமாக சாப்பிடும் பழக்கமும் இருக்கிறது. தங்களுக்கு இருக்கும் வலி, கோபத்தில் கூட வயிறு முழுமையாக இருந்தாலும் மேலும் மேலும் தன்னை தண்டித்து சாப்பிடுவர். மேலும் அளவுமீறின உடற்பயிற்சி செய்வது, சூடான ஒரு பொருளை கையாள்வது, புகை பழக்கம், குடிப்பழக்கம் கூட போன்றவையும் இதில் அடங்கும். ஆண்களை பொறுத்தவரை தற்கொலை அதிகமாக இருக்கும். பெண்களை பொறுத்தவரை இதுபோன்று செல்ப் ஹார்ம் நிறைய இருக்கும். இது குறிப்பாக பார்டார் லைன் ஆளுமை கோளாறு என்று சொல்லக்கூடிய நோயில் அடங்கும்.
உள்ளுக்குள்ளே அவர்களுக்கென்று தனி மதிப்பு இல்லாததால் வெறுமையாக உணர்பவர்களிடம் பொதுவாக இந்த செல்ப் ஹார்மை பார்க்கலாம். இந்த காலத்தில் டீன் ஏஜ் குழந்தைகளிடம் கூட இது நிறைய காணப்படுகிறது. இதுபோன்று மனதில் உள்ள வலியைக் கையாளும் யுக்தியாக அப்படியே அதை ஜர்னலில் எழுதுவது, மெடிட்டேஷன் செய்வது, பாக்சிங் போன்ற ஸ்போர்ட்ஸ் ஆக்ட்டிவிட்டியில் திசை திருப்பி தங்களுடைய வலியை அதில் காட்டி ஆரோக்கியமான வகையில் நம்முடைய உணர்வை வெளிக்காட்டி தீய வகையில் செல்லாமல் தடுக்கலாம்.