அதிகப்படியான யோசனை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்று மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்குகிறார்.
சாதாரணமாக ஒருவருக்கு 72,000க்கும் அதிகமான சிந்தனைகள் வரும். இது இயல்பானது. கற்காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதன் தன்னை விலங்கிடமிருந்து காப்பாற்றிக்கொண்ட காலத்திலிருந்து இந்த நெகடிவ் திங்கிங் என்பது பரிணாமத்தில் இயற்கையாகவே இருந்து வருகிறது. இந்த ஓவர் திங்கிங் என்பதை மருத்துவத்தில் 'ரூமினேஷன்' என்று குறிப்பிடுவோம். அசை போடுதல் என்று அர்த்தம். ஒருவர் நடந்ததையே திருப்பி திருப்பி நினைத்து பார்த்து அசை போட்டுக்கொண்டே இருக்கும்போது அதுவே மோசமான நிலைக்கு கொண்டு போய்விடும்.
அசை போடுவதால் அவர்களுக்கு அதிலிருந்து தீர்வு கிடைக்காது. ஆனால் அதையே வேறு வேறு விதமாக சிந்தித்து கொண்டிருப்பர். ஒன்று நடந்ததை மட்டுமே யோசிக்கும் வரலாற்று பிரியராகவோ அல்லது எதிர்காலத்தை நினைத்து கவலைப்படும் ஜோசியக்காரர்களாகவோ தான் சிந்திக்கிறார்கள். இதனால் தான் 'நிகழ்கால உணர்வு' இல்லாமல் இருப்பது என்று சொல்லப்படுவது. இதில் சோசியல் மீடியா பெரும் பங்கு விளைவிக்கின்றது. நமது மூளையை மல்டி டாஸ்கிங் செய்ய வைத்து அளவுக்கதிகமான சக்தியை வாங்கி அடிமையாக வைத்திருக்கின்றது. இது அசைபோடுவது என்னும் ரூமினேஷனுடன் நின்று விடாமல் டிப்ரெஷன் என்று நோய் வரை சென்றால் ஆபத்துதான்.
தானாக வரும் சிந்தனைகள் என்பது 'இன்றூசிவ் தாட்ஸ்'-இல் வரும். உதாரணமாக தினசரி, கதவை பூட்டினோமா கேஸ் அணைத்தோமா என்று சந்தேகம் மற்றும் குழப்பமான எண்ணங்கள் போன்று வருவன. இதற்கும் ரூமினேஷன்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ரூமினேஷன்க்கு நல்ல தீர்வாக அமைவது மனதை திசைதிருப்புதல் தான். மனம் யோசித்துக் கொண்டு இருக்கும்போது உடனடியாக அலமாரியை அடுக்குவது போன்றவை செய்யலாம். அதை செய்து முடித்ததும் நமக்கு நாமே சாதித்தது போன்று ஒருவித திருப்தி கிடைக்கும். அடுத்த யுக்தியாக அர்ப்பணிக்கப்பட்ட கவலை நேரம் என்று ஒதுக்கிவிட்டு மத்த நேரம் சிந்தனைகள் வந்தாலும், அதற்கான நேரம் என்று வரும்போது நினைத்து கொள்ளலாம் என்று மனதை நாமே திசை திருப்பி கொள்ளலாம்.
முடிந்து போன காதலயோ, மாமியாரையோ பேசிய கடின வாக்குவாதங்களை மீண்டும் நினைத்து அசைபோடும். அது நிஜத்தில் அந்த இடத்தில் அவர்கள் இல்லை என்றாலும், அந்த நினைவுகள் நிஜமாக நடந்தபோது கொடுத்த அதே உணர்வுகள் நீங்கள் நினைக்கும்போது மீண்டும் உணர்வீர்கள். இது ஆரோக்கியமான விஷயமன்று. இதற்கு நினைவாற்றல் தியானம் (mindfulness practice) பயிற்சி எடுக்கலாம். ஒரு இடத்தில் கண்களை மூடி உட்கார்ந்து மூச்சினில் மனதை செலுத்தி, சிந்தனைகள் வரும்போது இயல்பாக அதன் போக்கினில் அப்படியே விட்டுவிட வேண்டும். நம்மை சுற்றி வேறேதும் சத்தம் கேட்டாலும், நாம் இருக்கும் இடத்தை உணர்ந்து பார்த்து அந்த குறிப்பிட்ட நேரம் நாம் ஒருமித்த மனதோடு இருப்பது என்பது நம் வாழ்க்கை முறை. அதுதான் 'mindfulness' என்பது.
இதற்கென்று பயிற்சி என்று ஒதுக்கவில்லை என்றாலும், நாம் சாப்பிடும் போது கூட, சுற்றி இருப்பனவற்றை கவனித்து அதில் ஒருநிலையோடு 20 நிமிடம் செய்தோம் என்றாலும் கூட நல்ல பலன் இருக்கும். இதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபணமானது. மனது அலைபாயும் பொழுது ஜர்னலிங் கூட செய்யலாம். நம் சிந்தனையை அப்படியே எழுதுவதன் மூலம் கூட உங்கள் கோவம் கூட குறைந்து கொண்டே வரும். அடுத்து 'எம்ப்டி சேர்' முறை என்று உண்டு. அதில் உங்களுக்கு யார் மேல் கோவம் வருகிறதோ அவர்கள் உங்கள் முன்னே இருப்பது போன்று நினைத்து கொண்டு ஒரு சேரை பார்த்து உங்கள் மனதில் உள்ள கோபங்களை கொட்டி மனதை அமைதிப்படுத்தலாம்.