Skip to main content

வாதம், பித்தம், கபம் உடலமைப்புக்கான உணவுகள்  -  சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Dr Salai Jaya Kalpana | Mudra | Food |

ஒவ்வொரு உடல் அமைப்பும் வேறுபடும் என்பதால் அதற்கு தகுந்தாற் போல உணவு முறையை பின்பற்ற வேண்டும். பித்தம், வாதம், கபம் உடம்பு என்பார்கள். அதுபோன்ற உடலமைப்பு கொண்டவர்கள் என்ன மாதிரியான உணவினை எடுத்துக் கொள்ள வேண்டுமென சித்த முத்திரை மருத்துவர் சாலை ஜெய கல்பனா விளக்கம் அளிக்கிறார்.

வாத உடலினைப் பொறுத்தவரை அரிசி, சர்க்கரை, பால் போன்ற வெள்ளை உணவுகள் தவிர்க்கவே கூடாது. ஏனெனில் அவர்கள் பொதுவாகவே வறட்சியான உடலமைப்பை கொண்டிருப்பர். அவர்கள் பால் உணவுகளான தயிர், நெய், வெண்ணை, தாளித்த மோர் போன்றவை சேர்த்துக் கொள்ள வேண்டும். லேசான எண்ணெயில் பெருங்காயம், சோம்பு, சீரகம், கறிவேப்பிலை போன்றவையே தாளித்து உப்பு கலந்து மோர் எடுத்துக்கொள்ள வேண்டும். 

கப உடலினரைப் பொறுத்த வரை வெள்ளை உணவுகள் விஷம் போன்றது. கபம் என்றால் காற்றை குறிக்கும். இயல்பாகவே அவர்கள் எப்போதும் நிறைய சிந்தனை ஓட்டத்துடன் இருப்பர். எனவே இரவில் உறங்க சிரமப்படுவர். அவர்களெல்லாம் இரவில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு தூங்கலாம். சர்க்கரை சேர்க்காத அல்லது எலுமிச்சை கலந்த கார்பனேட்டட் பானங்களான சோடா போன்றவை மட்டுமே ஒத்து வரும். உணவுக்கு பின் எடுக்க கூடிய காபியோ, சூடான பானங்களும் அவர்களுக்கு ஒத்து வரும். பழங்களை பொறுத்தவரை எல்லா வகையும் அவர்களால் எடுத்துக்கொள்ளமுடியும். 

கீரை வகைகளை பச்சையாக ஸ்மூத்தி போன்றோ, வேக வைக்கமாலோ சாப்பிட கூடாது. கருணை கிழங்கு தவிர வேறு எந்த கிழங்கும் வாத தேகத்தினருக்கு ஒத்துக்கொள்ளாது. துவரம் பருப்பை வேகவைக்கும் போது பெருங்காயமும், விளக்கெண்ணெய் சேர்த்து  சாப்பிட்டால் அவர்களுக்கு வாயு தொந்தரவு எடுக்காது. அவர்களுக்கு பாசி பருப்பு, கொண்டைக் கடலை  மட்டுமே அஜீரண தொந்தரவு செய்யாது. கொண்டைக் கடலையையும் உப்பு காரம் சேர்த்து வேகவைத்த சாப்பிட வேண்டும். வாத தேகத்தினருக்கு  கை, கால் வலி ஏற்படும்போது கொஞ்ச நாளைக்கு நல்லெண்ணெய் தவிர்த்து விட்டு, நெய், கடலெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். 

அசைவ உணவுகளைப் பொறுத்தவரை வாதம், கபம் உடலமைப்பு கொண்டவர்களுக்கு வேகவைத்த கோழிக்கறி சூடு ஆனாலும் ஒத்துக்கொள்ளும். கடல் மீன்கள், சிறிய அளவில் ஆட்டுக்கறி போன்றவை சேர்த்து கொள்ளலாம். பித்த தேகத்தினரும் ஆட்டுக்கறி சேர்த்து கொள்ளலாம். வாத தேகத்தினர் முட்டை, கருவாடு வகைகளை தவிர்க்க வேண்டும். ஊறுகாயை பொறுத்தவரை நார்த்தங்காய், இஞ்சி வகைகள், மற்றும் அப்பளம் போன்ற உப்பு வகைகள் வாத தேகத்தினருக்கு ஒத்துக் கொள்ளும். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது அதிக நேரம் உடல் முழுக்க வைத்து வெயிலில் நின்று அதன் பின்னர் குளிக்க வேண்டும். அவர்கள் பொதுவாகவே மிதமான வெந்நீரில் குளிப்பது நன்று. அதே பித்த தேகத்தினர் வெயில் ஆரம்பிக்கும் முன்பு  குளித்து முடித்து விட வேண்டும். வாத தேகத்தினர் கால்களில் குளிர்ச்சியோடு இருக்கும். பித்த தேகத்தினருக்கு சூடு தலையில் தேங்கும். எனவே வாத உடலினர் குளிக்கும் போது காலிலிருந்து ஆரம்பித்து கொஞ்ச கொஞ்சமாக தலை வரை வெந்நீர் ஊற்ற வேண்டும்.