ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றும் முறை தற்போது அதிகமாகியுள்ள சூழ்நிலையில், அதனால் ஏற்படும் மூல நோய் குறித்து விரிவாக விளக்குகிறார் இரைப்பை மற்றும் குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கண்ணன் அவர்கள்.
ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கத்தைத் தான் நாம் மூலம் என்கிறோம். நம்முடைய நவீன வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஏற்படும் நோய்களில் மூலமும் ஒன்று. சிலர் நீண்ட நேரம் அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ வேலை செய்வார்கள். ஐடி துறையில் வேலை செய்பவர்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம். இவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பும் அதிகம். சரியான வகையில் உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது முக்கியமான காரணம். இவர்களுக்கு மூல நோய் ஏற்பட அதிகமான வாய்ப்புண்டு. உடல் பருமன் இருப்பவர்களுக்கும் இது ஏற்படும்.
தொற்றுகளால் சிலர் ஒரு நாளைக்கு 15 முறைக்கு மேல் கூட மலம் வெளியேற்றுவார்கள். இவர்களுக்கும் மூலம் ஏற்பட வாய்ப்புண்டு. மலக்குடலில் கேன்சர் உள்ளவர்களுக்கும் இது நடக்கும். பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தம் காரணமாக மூலம் உண்டாகலாம். 45 வயது முதல் 65 வயதுக்குள் இருப்பவர்களுக்கு மூலம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இரத்தப்போக்கு தான் மூல நோயின் முக்கியமான அறிகுறி. ஆசனவாய் பகுதியில் வீக்கம், எரிச்சல், வலி ஆகியவையும் ஏற்படலாம். மூல நோய் 4 நிலைகளைக் கொண்டது.
முதல் நிலையில் மலம் வெளியேற்றும்போது வலி இருக்கும். முதலில் அது மூலநோய் தானா என்பதை நாங்கள் பரிசோதிப்போம். மலச்சிக்கல் என்றால் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளச் சொல்வோம். மாதுளை, பப்பாளி, கொய்யாப்பழம், வாழைப்பழம், உலர் திராட்சை ஆகியவை உடலுக்கு நல்லது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 60 கிலோ எடை உள்ளவர்கள் மூன்று லிட்டர் தண்ணீரையாவது தினமும் குடிக்க வேண்டும். தினமும் உடற்பயிற்சியும், நடைபயிற்சியும், தியானமும் செய்ய வேண்டும்.
தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும். இரண்டாம் நிலை மூலத்துக்கும் இதே தீர்வு தான். மூன்றாம் நிலை மூலத்தை லேசர் ட்ரீட்மென்ட் மூலமும் அறுவை சிகிச்சை மூலமும் குணப்படுத்தலாம். நான்காம் நிலை மூலத்தை அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும். வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலமும் சிகிச்சைகளின் மூலமும் குணப்படுத்தக்கூடிய நோய் தான் மூல நோய்.