சிசேரியன் டெலிவரி மற்றும் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களை ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
நம்முடைய உடல் என்பது உயிரிகளால் சூழப்பட்டது. இவை வெறும் பாக்டீரியாக்கள் மட்டும் அல்ல. இவை நம்முடைய உடல் முழுவதும் பரவியிருக்கின்றன. நாம் உணவு உண்ணும்போது பல்வேறு உயிரிகள் அதன் மூலம் வயிற்றுக்குள் செல்கின்றன. காய்கறிகள், பழங்கள் என்று நாம் உண்ணும் அனைத்திலும் உயிரிகள் இருக்கின்றன. நம்முடைய வயிற்றில் இருக்கும் கோடிக்கணக்கான உயிரிகளை நம்மால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த உயிரிகள் நம்முடைய வயிற்றுக்குள் வாழ்ந்தால் தான் நம்முடைய உடல் சமநிலையில் இருக்கும்.
உடலில் நல்ல பாக்டீரியாக்களும் இருக்கின்றன, கெட்ட பாக்டீரியாக்களும் இருக்கின்றன. அனைத்துமே நமக்குத் தேவையான பாக்டீரியாக்கள் தான். பொதுவாக அவை சமநிலையில் இருக்கும். அந்த சமநிலை மாறும்போது வயிற்றில் பிரச்சனைகள் ஏற்படும். இந்த உயிரிகளை வைத்து பல்வேறு நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. குழந்தைகளுக்கு சுகப்பிரசவத்தில் தாயின் மூலம் இந்த உயிரிகள் கடத்தப்படுகின்றன. சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு இது குறைவாகவே இருக்கும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்கு சிசேரியன் பிரசவமும் ஒரு காரணம்.