உணவு உண்ணும் முறை குறித்து நம்மிடம் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா விளக்குகிறார்.
இஸ்ரேல் நாட்டில் சாலட் உணவுகள் அதிகமாகக் கிடைக்கின்றன. நம்மூரில் பிரியாணி கடைகள் தான் அதிகம் இருக்கின்றன. நல்ல உணவுகளை நாம் அதிகம் விற்பனை செய்வதில்லை. தெருவுக்கு ஒரு சாலட் பார் நிச்சயம் இங்கும் வரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எப்போதாவது ஒருநாள் அளவாக பிரியாணி சாப்பிடுவதில் தவறில்லை. கல்யாண வீடுகளில் இப்போது பரிமாறப்படும் உணவுகளில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய கலோரிகளை விட மிக அதிகமான கலோரிகள் இருக்கின்றன. ஒரு நாள் கல்யாண சாப்பாடு சாப்பிட்டால் ஏழு நாட்கள் டயட் இருந்தால்தான் கலோரிகளை கட்டுப்படுத்த முடியும்.
இதனால் உடல் பருமன் விரைவில் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. உடல் உழைப்பில் அதிகமாக ஈடுபடுபவர்களுக்கு அதிகப் பசி இருக்கும். பசித்த பிறகே உண்ண வேண்டும். பசிக்குத் தான் நாம் சாப்பிட வேண்டுமே தவிர பழக்கத்திற்காக சாப்பிடக்கூடாது. காய்கறிகள், புரோட்டின், பாரம்பரிய முழு தானியம் ஆகியவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை கோதுமையைத் தவிர்க்க வேண்டும். புரோட்டீனில் நிச்சயம் ஒரு அசைவ உணவு இருக்க வேண்டும். அவற்றை சமைத்தோ அல்லது சுட்டோ உண்ண வேண்டும். அவ்வப்போது பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த வகையில் சாப்பிட்டு வந்தால் எந்த ஊட்டச்சத்து நிபுணரின் உதவியும் உங்களுக்குத் தேவையில்லை.