தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில்.
இந்த கோயிலின் சிறப்பு 33 அடி உயரத்தில் தாவிச் செல்லும் குதிரை சிலைக்கு, அதே உயரத்தில் காகிதப்பூ மாலைகள் அணிவிப்பதே. லட்சம் பேர் கூடும் 2 நாட்கள் நடக்கும் மாசிமகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் லாரி, வேன், கார் போன்ற வாகனங்களில் காகிதப்பூ மாலைகளை ஏற்றி வந்து பிரமாண்ட குதிரை சிலைக்கு அணிவித்து அதன் அழகை காண்பதே சிறப்பாக இருக்கும். இந்த கோயிலில் நேற்று (11-08-24) ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பூரணம்பாள் -புஷ்பகலாம்பாள் - பெருங்காரையடி மிண்ட அய்யனார் மற்றும் பெரிய கருப்பருக்கு சந்தனக்காப்பு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.