புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் சங்ககால கோட்டை, கொத்தளம் சிதிலமடையாமல் உள்ள நிலையில் கோட்டைக்குள் அகழாய்வு செய்ய அனுமதி பெற்று தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு இயக்குநர் தங்கதுரை குழுவினர் அரன்மனைத்திடலில் நீராவி குளக்கரையில் அகழாய்வு செய்து வருகின்றனர்.
முதல்கட்ட அகழாய்வில் வட்ட வடிவிலான சுடு செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டது. மேலும் தங்க மூக்குத்தி உள்பட பல்வேறு உலோக ஆபரணங்கள், கண்ணாடி துண்டுகள், பானை ஓடுகள், பாறை ஓட்டில் தமிழி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட அகழாய்விலும் சூது பவள மணிகள் உள்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அகழாய்வு நடக்கும் இடத்திலேயே பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பார்க்கின்றனர்.
அதே போல, இன்று ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு புதுக்கோட்டையின் எல்லைக் காவல் தெய்வமாகக் கருதப்படும் பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் பால் குடம், காவடி, சந்தனக்காப்பு சிறப்பு வழிபாடுகள், அன்னதானம் எனத் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அகழாய்வு நடக்கும் இடங்களையும் பார்க்க வருவார்கள் என்பதால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் கூட பொதுமக்களின் ஆர்வத்திற்கு ஆசைக்கும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக தொல்லியல் குழுவின் இன்று அகழாய்விடத்தில் எடுக்கப்பட்ட தொல்பொருட்களின் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளனர்.
அதே போல கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் அகழாய்விடத்திற்கு வந்து பார்க்கின்றனர். பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அகழாய்வு இயக்குநர் தங்கதுரை குழுவினர் விளக்கமளித்து வருகின்றனர்.