மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், விருத்தாச்சல திருத்தலம் குறித்தும் அங்கு வாழ்ந்த குரு நமச்சிவாயர் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
பாரதி கண்ணனைப் பற்றி பாடுகிறபொழுது என் பசிக்குச் சோறு, என் மழைக்கு குடை கண்ணன் என்றார். பாரதி கண்ணனை வேலைக்காரராக, விளையாட்டுப் பிள்ளையாக, காதலராக, மன்னனாக என எல்லா கண்ணோட்டத்திலும் பார்த்தார். பாரதியின் கண்ணன் பாட்டு அற்புதமான இலக்கியம். எல்லாவற்றையும் இறைவனிடத்தில் கேட்பது என்பது ஒரு சம்பிரதாயம். இன்றைய விருத்தாச்சலம் ஒரு காலத்தில் முதுகுன்றம் என்று அழைக்கப்பட்டது. அந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த சிவத்தலம். காசிக்குச் செல்ல காசில்லாதவர்கள் விருத்தாச்சலம் செல்லலாம். காசிக்குச் சென்றால் கிடைக்கும் புண்ணியம் விருத்தாச்சலம் சென்றாலே கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழகத்தில் உள்ளது. அதனால்தான் விருத்தாச்சலத்திற்கு விருத்தகாசி என்றொரு பெயரும் உண்டு.
விருத்தாச்சலத்தில் குரு நமச்சிவாயர் என்று ஒருவர் இருந்தார். அவர் சோறு கொண்டு வா என்று விருத்தாச்சலத்தில் உள்ள அம்பாளிடம் கேட்கிறாள். அம்பாள் மீது அளவு கடந்த காதல் கொண்ட அவர் எல்லாம் அவளே என்று நம்பினார். அவளிடம் சோறு கேட்பதை,
"நன்றி புனையும் பெரிய நாயகி எனுங்கிழத்தி
என்றும் சிவனாரிடக் கிழத்தி - நின்ற
நிலைக் கிழத்தி மேனி முழுநிலக் கிழத்தி
மலைக் கிழத்தி சோறு கொண்டு வா"
என்று பாட்டாகப் பாடுகிறார். வழக்கமாக அவர் சோறு கொண்டு வா என்று அம்பாளிடம் கேட்டால் உடனே அவருக்குச் சோறு வந்துவிடும். ஆனால், அன்று சோறு வரவில்லை. அம்பாள் சோறு கொண்டுவருகிறாளா என்று காத்திருக்கிறார். ஆனால், தன்னை கிழத்தி கிழத்தி என்று சொல்லியதால் அம்பாள் கோவித்துக் கொண்டுவிட்டாள். குரு நமச்சிவாயர் உரிமையோடு கிழத்தி என்று கூறியதை வயதானவள் என்று தன்னை அழைப்பதாக நினைத்து அம்பாள் கோவித்துவிட்டார். உடனே குரு நமச்சிவாயர்,
"முத்தி நதி சூழும் முதுகுன் றுறைவாளே
பத்தர் பணியும் பதத்தாளே -அத்தன்
இடத்தாளே முற்றா இளமுலை மேலார
வடத்தாளே சோறு கொண்டு வா"
என்று பாடுகிறார். கிழத்தி என்று அழைப்பதை விடுத்து, தற்போது அம்பாளை இளமையானவளாகப் பாவித்து பாடுகிறார். அவருக்குச் சோறும் கிடைக்கிறது. வானம் வேண்டும், தானம் வேண்டும். எதுவாக இருந்தாலும் அதை அம்பாள் தரவேண்டும் என்று வாழ்ந்தவர் குரு நமச்சிவாயர். கண் மூடி கண் திறப்பதற்குள் எண்ணூறு பாடல்கள் பாடுகிற ஆற்றல் அவரிடம் இருந்தது. தமிழுக்கு அறம், திறம், நிறத்தோடு இறைவனிடம் உரிமை எடுத்துக்கொள்ளும் குணமும் உள்ளது. சித்தன் போக்கு சிவன் போக்கு என்று எதற்கும் ஆசைப்படாமல் வாழ்ந்தவர்களில் ஒருவரான குரு நமச்சிவாயரை கொண்டாடி மகிழ்ந்தால் இதயத்தில் குதூகலமும் நெஞ்சில் நம்பிக்கையும் பூத்துச் செழிக்கும்.