கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எம்.குன்னத்தூர் கிராமம். இங்குள்ள மிகவும் பழமையான தானத்த அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள அய்யனாரை, எம்.குன்னத்தூர்,பெருங்குறிக்கை, பூவனூர், வடமாம்பாக்கம், சிக்கம்பட்டு, கிளியூர், ரகுநாதபுரம், நன்னாவரம், புத்தனந்தல் உட்பட 15 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.
இந்த கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முப்பூசை திருவிழா நடப்பது வழக்கம். இந்த நிலையில் இந்த ஆண்டு தானத்த அய்யனார் கோவில் முப்பூசை திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக 15 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் படையல் செய்து கொண்டு வந்திருந்த பூசை கூடை மற்றும் ஆடு கோழி பன்றி மற்றும் படையல் பொருட்களை எம்.குன்னத்தூர் பெரிய வீட்டிலிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துக்கொண்டு தானத்த அய்யனார் கோவிலை அடைந்தனர்.
அங்குச் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு 15 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நேரத்தில் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து கோவிலின் முன்பாக வேண்டுதலின் பேரில் பக்தர்கள் கொண்டு வந்திருந்த சுமார் 2000 ஆடுகள் 2000 கோழிகள் 500க்கும் மேற்பட்ட பன்றிகள் ஆகியவற்றைப் பலியிட்டு நேர்த்திக்கடன் செய்தனர். தொடர்ந்து தானத்த அய்யனாருக்கு சிறப்புப் பூஜையும் நடைபெற்றது இதில் எம்.குன்னத்தூர், கிளியூர், பூவனூர், வடமாம்பாக்கம் மட்டுமின்றி சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.