Skip to main content

பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Kalalhagar who got up dressed in green silk

 

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா ஆகியவை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் ஒன்று. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கரோனா ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் அனுமதியின்றி ஆகமவிதிப்படி நடத்தப்பட்ட நிலையில் கடந்த வருடம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு திருவிழா நடைபெற்றது.

 

சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமர்சையாக  கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் ஒன்று கூட, தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வும் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். 

 

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த 29ம் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 2ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணிக்கு துவங்கி நடைபெற்றது. 

 

3ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக மே 4ம் தேதி கோயிலில் இருந்து தங்கக் குதிரையில் அழகர் புறப்பட்டார். ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அழகர் அணிந்துகொண்டார். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்கு முன்பாக ஆற்றின் மையப் பகுதியில் அமைந்துள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கு நிகவு இன்று (மே 5ம் தேதி) காலை 6 மணி அளவில் நடந்தது. 

 

இன்று காலை 6 மணிக்கு கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் வலம் வந்து வைகை ஆற்றில் எழுந்தருளினார். இந்நிகழ்வில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, அழகர் ஆற்றில் எழுந்தருளியபோது ‘கோவிந்தா கோவிந்தா’ என பரவசத்துடன் கோஷமிட்டனர். 

 

நாளை 6ம் தேதி வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டு பின்னர் கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது. பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அனந்தராயர் பல்லக்கில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பட்டு செல்வார். தொடர்ந்து 8ம் தேதி அழகர் பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு திரும்பு நிகழ்வு நடக்கவிருக்கிறது.