சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த பூமி திருவண்ணாமலை. அண்ணாமலையார் கோயிலால் திருவண்ணாமலை புகழ்பெற்று விளங்குகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், அதில் அரசியல், திரைத்துறை, தொழில்துறை, நீதித்துறை பிரபலங்கள் உட்பட அரசுத்துறை உயர் அதிகாரிகள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது தற்போது சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்நிலையில் மக்கள் கவனத்தை பெரிதும் கவராத சாமியார்களை பிரபலமானவர்கள் சந்திப்பது திருவண்ணாமலை மக்களை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
அப்படி சமீபகால பரபரப்பு ஆச்சர்யத்துக்கு மக்களை உள்ளாக்கியவர் மூக்குபொடி சாமியார். 20 வருடங்களுக்கு முன்பு, ஏதாவது ஒரு கடை முன் போய் உட்கார்ந்தால் ஏய் தூர போய்யா சத்தம் போட்டே கடைக்காரர்களால் துரத்திவிடப்பட்டவர். அதற்கு காரணம், இவர் போய் அமரும்மிடம் வளர்பிறை போல் வளராமல் தேய்பிறையாகிவிடும் என்ற தகவல் உலாவியல் கடைக்காரர்கள் இவரை கண்டாலே துரத்திவிடுவார்கள். இதனால் கால்வாய் ஓரம் தான் படுத்துக்கிடப்பார். ஆட்டோக்காரர்கள் யாராவது மூக்குபெடி வாங்கி இவரை நோக்கி வீசுவார்கள். அவரேயே இன்று தேடித்தேடி வந்து சந்திக்கிறார்கள் பிரபலமானவர்கள். தனது வியாபார தலத்துக்கு வரமாட்டாரா என ஏங்கி தவிக்கிறார்கள் வியாபாரிகளும். பணம், பொருள் என எதுக்கொட்டி தர சிலர் முன் வந்தாலும் வாய் திறந்து பேசமறுக்கிறார், அவர் முன் வைக்கும் பணத்தையே பெரும்பாலும் தொடுவதுக்கூட கிடையாது.
ஆசி என்பது, அவரே வாய் திறந்து ஒன்றிரண்டு வார்த்தை சொல்வார் அல்லது கைதடியால் ஒரு அடிவிழ வேண்டும், இல்லையென்றால் இங்கு பதிவிட முடியாத ஒரு வார்த்தையால் திட்டுவார். அப்படி ஒருவருக்கு நடந்துவிட்டால் அவர் வாழ்க்கையில் முன்னேறிவிடுவார் என்கிறார்கள் அவரை தினம் தினம் வந்து சந்திக்கும் பக்தர்கள்.
அவருக்கென நிலையான ஒருயிடம் கிடையாது. ஆனால், பெரும்பான்மை நேரத்தை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரேயுள்ள பூபதி டீ கடை தான் அவரது வசிப்பிடம். அங்குள்ள பெஞ்ச்சில் படுத்துக்கிடப்பார். நாம் சென்று சந்தித்த அன்று மதியம் 12 மணியளவில் அப்படித்தன் வயிற்றில் பெரிய மூட்டையோடு படுத்துக்கொண்டு இருந்தார். அவர் அங்கு இருப்பார் என்பதை தெரிந்துக்கொண்டு பல பக்தர்கள் வந்தபடியே இருக்கிறார்கள். அவரை தொந்தரவு செய்யாமல் அவர் அருகில் மூக்குபொடி பாக்கெட்டை வைத்துவிட்டு அவரை வணங்கிவிட்டு செல்கிறார்கள்.
இதுப்பற்றி அவரது நீண்ட கால பக்தர் பாக்ஸர் சுரேஷ் நம்மிடம், சாமியோட ஒத்தை வார்த்தைக்காக இங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்துயிருக்கிறார்கள். ஆனால், அந்த ஒத்தை வார்த்தை ஆசி பெரும்பாலானவர்களுக்கு கிடைப்பதில்லை. நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு அவரை சந்திக்க வந்துள்ளீர்கள் என்பதை அவர் அறிந்துயிருப்பார். அது நடக்கும் என்றால் ஒற்றை கையை லேசாக தூக்கி ஆசிர்வதிப்பார், இல்லையேல் அமைதியாக இருப்பார். சில நேரங்களில் அடிக்கவும் செய்வார் அல்லது ஓரிரூ வார்த்தை கூறுவார். அதை அனைவரும் திட்டுகிறார் என நினைத்துக்கொள்கிறார்கள். உண்மையில் அது திட்டுவதில்லை. அவர் ஒருவரை அடிக்கிறார், திட்டுகிறார் என்றால் பாவங்கள், கஸ்டங்களை போக்குகிறார் என்று அர்த்தம் என்றவர், இவரிடம், டி.டி.வி, இளையராஜா, நடிகர் சந்தானம் போன்றவங்க வந்துயிருக்காங்க என்கிறார் பாக்ஸர் சுரேஷ்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் கல்லேரி துரையோ, 2012ல் இருந்து எனக்கு அவர் அறிமுகம். ஓஹோவென இருந்தேன், சில கெட்ட பழக்கங்களும் இருந்தன. இதனால் நொடிந்துப்போய் இருந்தபோது தான் இவரை பார்க்க வந்தேன். எதுவும் சொல்லமாட்டார், ஒருமுறை வண்டிய எடுப்போலாம் என்றார். அவர் வண்டியில் பின்னால் உட்காரவைத்துக்கொண்டு மலை சுற்றினேன். அப்போதுயெல்லாம் முதுகில் பளார், பளார் என அடித்துக்கொண்டே வருவார். மாதத்தில் 2 அல்லது 3 முறை சுற்றியிருக்கிறோம். ஒரு சில முறை ஒரே நேரத்தில் 3, 4 ரவுண்ட் கிரிவலம் வரவைப்பார். அப்பக்கூட எனக்கு ஏதாவது நல்லது நடக்க வழி செய்யேயான்னு கேட்பன், அப்படி எப்பயெல்லாம் கேட்கறனோ அப்பயெல்லாம் வண்டிய எடு கிரிவலம் போகலாம்ன்னு சொல்வார், வண்டியில உட்கார்ந்துக்கிட்டு என்னை முதுகுல அடிச்சிக்கிட்டே வருவார். அதன்பின் கெட்ட பழக்கங்களில் இருந்து வெளியே வந்தேன். ஒருமுறை நீ கார் வாங்கப்போறன்னார். தொழில் நஷ்டத்தல எல்லாம் இழந்துட்டு இப்பத்தான் தொழில் செய்ய தொடங்கியிருக்கன் இப்பப்போய் கார் வாங்கப்போறன்னு கிண்டல் பண்றியேய்யான்னு அவர்க்கிட்டயே சொன்னன். அவரும் சிரிச்சிட்டு விட்டுட்டார். அடுத்த இரண்டாவது நாள், என்னோட நண்பர் அவரோட புதுக்காரை 50 ஆயிரத்துக்கு குறைச்சி வித்தார். பேங்க் தவணையை என்னை கட்டிக்கச்சொன்னார். வெறும் பத்தாயிரம் தந்து காரை வாங்கனன். அப்பத்தான் அவரோட மகிமை புரிஞ்சது.
அவர் திடீர்ன்னு வா திருச்செந்தூர் போகலாம்ன்னு சொன்னார். சாமி, நான், நண்பர் ஒருத்தர் மூணு பேர் கார்ல போனோம். திருச்செந்நூர் போனதும் கடல்ல குளின்னு சொன்னார். சொன்னதும் போய் குளிச்சன், பின்னாடியே வந்தர் அவரும் குளிச்சிட்டு நிர்வாணாமா மணல்ல வந்து உட்கார்ந்தவர், எங்களை கோயிலுக்குள்ள போய் வா சொன்னவர், அவர் வரமாட்டேன்னிட்டார். கோயிலுக்குள்ள போய் வரும்போது பார்த்தா அவரை சுத்தி கூட்டம். இவரைப்பத்தி தெரியாம ஆசி வழங்குங்கன்னு சொன்னவங்கள விரட்டினார். அப்பறம் இவரைப்பத்தி சொல்லி தொந்தரவு பண்ணாதிங்கன்னு அனுப்பிவச்சிட்டு அழைச்சிக்கிட்டு வந்தன். இப்படி வேதாரண்யம், ராமேஸ்வரம், பெங்களூரு போகலாம்ன்னு சொல்லியிருக்கார் அழைச்சிக்கிட்டு போயிருக்கன் என்றார் துரை.
பூர்வீகம் சின்னசேலம் அருகிலுள்ள கிழக்கு ராஜாபாளையம் என்கிற கிராமத்தை சேர்ந்த ஆறுமுககவுண்டர் மகன் மொட்டையக்கவுண்டர். திருமணமாகி 5 வயதில் பிள்ளை இருந்தபோது, திடீரென அவரது மனைவி உடல் நலம்மில்லாமல் இறந்ததால் அதில் விரக்தியுற்று 5 வயது குழந்தையான மகனை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அண்ணாமலையரை தேடிவந்தவர் அதன்பின் வீட்டுக்கு செல்லவில்லை. இன்று அவர் மகன் திருமணமாகி பிள்ளை பெற்றுள்ளார். எதற்கும் சென்றதில்லை, மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் வந்து மாதம் ஒருமுறை சந்தித்துவிட்டு செல்கின்றனர். நாம் அவரை சந்திப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மூக்குபொடி சாமியாரை சந்தித்த அவரது மகன், வயதானக்காலத்தில் இங்கே ஏன் இருக்கறிங்க வீட்டுக்கு வந்துடுங்க என அழைத்தார், வரமாட்டான், இதுதான் என் வீடுன்னு சைகையாலயே சொல்லி அனுப்பிட்டார் என்றார் அவருக்கு தினமும் உணவு பறிமாறும் ஹோட்டல் சப்ளையரும், அவரது பக்தருமான சிவலிங்கம். தொடர்ந்து அவரே, சொந்த கிராமத்துக்கு அருகில் உள்ள வீரபத்திரசாமியின் பக்தர் அவர் என்றார். அங்கு நடேசசாஸ்திரி ஜீவசமாதி, அவரோட சொந்த ஊருக்கு அருகில் உள்ளது அங்க அப்பப்ப போய்ட்டு வருவார் என்றார். காலையில் 2 இட்லி, மதியம் ஒரு பிடி சாதம், சாயந்தரம் 2 இட்லி அவ்வளவு தான் அவரோட சாப்பாடு. அதலயே நிறைய எறும்பு, ஈ க்கு புட்டு புட்டு போட்டுடுவார் என்றார்.
மேஸ்திரி சங்கர், என் இரண்டு மகன்களுக்கு ஒரே நேரத்தில் டெங்கு, அதை காப்பாற்றி தந்தவர் சாமி தான் என அவர் புகழை பேசினார்.
இப்படி மூக்குபொடி சாமியாரின் புகழ்பாடும் பக்தர்கள் அதிகரிக்க அதிகரிக்க அவரை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளன.