சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு இருமுறை தேர் மற்றும் ஆருத்ரா தரிசன விழா நடைபெறும். ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன தேர்த்திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நேற்று (26-12-23) விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு சாமி, கோவில் கருவறையிலிருந்து தேருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. இதில் விநாயகர், சண்டிகேஸ்வரர், நடராஜர், சிவகாமசுந்தரி, முருகன் உள்ளிட்ட தேர்கள் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், இன்று (27-12-23) விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நடைபெறவுள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகமும், 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரமும், பஞ்ச மூர்த்தி வீதி உலாவும் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர், இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜ மூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசன காட்சியளித்து, சித்சபா பரவேசம் செய்யவுள்ளனர். அதன் பின்னர், வருகிற 28ஆம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலா காட்சியுடன் விழா முடிவுக்கு வரவுள்ளது.