![Vilupuram police love incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/VhmQpN1HTOAo2FG2xI9_dAx28Ztr-hiTcHqO9ji2j9g/1604321919/sites/default/files/inline-images/vizhupuram-in_23.jpg)
விழுப்புரம் அருகில் வசித்துவருபவர் மதன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 32. இவர் விழுப்புரம் ஆயுதப் படையில் போலீசாகப் பணிபுரிந்து வருகிறார். செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 26 வயது இளம் பெண் ஒருவர் சென்னையில் போலீசாகப் பணிபுரிந்து வருகிறார். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையில் சந்தித்துள்ளனர்.
பிறகு, கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். 'உன்னையே திருமணம் செய்து கொள்வேன், கைவிடமாட்டேன்' என்று ஆண் போலீஸ் கூறிய ஆசை வார்த்தைகளை நம்பிய அந்தப் பெண் போலீஸ், நெருங்கிப் பழகி பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார். இந்த நிலையில், வரும் 4 -ஆம் தேதி அந்த ஆண் போலீசுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடப்பதற்கு அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதையறிந்த, அந்தப் பெண் போலீஸ், "காதலித்த என்னையே கரம் பிடிப்பேன் என்று உறுதியாகக் கூறி என்னை நம்ப வைத்துவிட்டு, இப்போது வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளப் போவது நியாயமா? இது முறையா?" என்று கேட்டுள்ளார். "எனது பெற்றோரின் விருப்பத்தின்பேரில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்" என்று பெண் போலீசிடம் சாதாரணமாகத் தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் பல ஆண்களைப் போல இந்த ஆண் போலீசும் நம்மை ஏமாற்றிவிட்டாரே என்று தெரிந்து நொந்துபோன பெண் போலீஸ், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மதன் மீது புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலிப்பதும் பெண்களை ஏமாற்றுவதும் பல ஆண்களுக்கு பொழுதுபோக்கு. இதில் போலீஸ் உடையில் இருக்கும் மதன் மட்டும் விதிவிலக்கா என்ன? என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.