கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே முகக்கவசத்திற்குள் முடக்கிப் போட்ட கொரோனா வைரஸின் விஸ்வரூபம் தணிந்து இயல்பு நிலைக்கு சென்றிருக்கும் நிலையில் கொரோனாவை விட 20 மடங்கு சக்தி வாய்ந்த கொடிய வைரஸ் ஒன்றின் பரவல் இருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வைரஸ்களின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து புறப்பட்ட கொரோனா உலகம் முழுவதும் பரவி ஆட்டிப்படைத்ததை அவ்வளவு எளிதில் நாம் மறந்துவிட முடியாது. இதுவரை 70 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அச்சுறுத்தல் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும் முடக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தடுப்பூசி, சமூக இடைவெளி எனும் பாதுகாப்பு வழிகாட்டு விதிமுறைகள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஒருவழியாக தடுக்கப்பட்டது.
இந்நிலையில் புதிதாக ஒரு வைரஸ் சவால் கொடுத்து வருவதாக விஞ்ஞானிகள், சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பரவி வரும் அந்த நோய்க்கு 'எக்ஸ்' என உலகச் சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. 'எக்ஸ்' வைரஸ் ஐந்து கோடி உயிர்களைப் பறிக்கும் ஆற்றல் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரவி வரும் 'எக்ஸ்' தொற்று கொரோனா வைரஸை விட 20 மடங்கு ஆபத்தும், 67% இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளதாம். ஆயிரக்கணக்கான வைரஸ்களை உள்ளடக்கிய 25 புதிய வைரஸ்களை ஆராய்ந்ததில் 'எக்ஸ்' வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதற்கான மருந்துகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் உலக சுகாதார அமைப்பின் நிபுணரும், இங்கிலாந்தின் தடுப்பூசி பணிக் குழுவின் தலைவருமான காதே பின்ஹாம் தூக்கிப்போட்ட குண்டு உலக நாடுகளை மீண்டும் முகக்கவசத்தை கையிலெடுக்க வைத்துள்ளது.