உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த மேலும் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 127 உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது.
போர் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று ஊடகங்களில் பேசுகையில், 'தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா உலக நாடுகளிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், ரஷ்யாவின் தாக்குதலை இரண்டாம் நாளாக உலக நாடுகள் வேடிக்கை பார்க்கிறது. முதல் நாள் எப்படி ரஷ்யாவை தனியாக எதிர்த்தோமோ அதேபோல் இன்று இரண்டாம் நாளும் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.சொன்ன வாக்குறுதிகளை மீறி ரஷ்ய தங்களது ராணுவத் தளவாட குடியிருப்பு பகுதிகளைத் தாக்கி வருகிறது என தெரிவித்துள்ளார்.