Skip to main content

இந்தியர்களுக்கு தடை விதிக்கும் உலக நாடுகள்!

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

indians

 

இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,761 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வரும் இரட்டை மரபணு மாற்றமடைந்த கரோனா, தங்கள் நாட்டில் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சில உலக நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதை தடை செய்துள்ளனர். 

 

இம்மாத தொடக்கத்தில் நியூசிலாந்து நாடு, இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதித்தது. தற்போது ஹாங்காங்கும் இந்திய பயணிகள் விமானத்திற்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று (20.04.2021) அமலுக்கு வருகிறது. முதன்முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு, சமீபத்தில் ஹாங்காங்கில் கண்டறியப்பட்ட இந்த தென்னாப்பிரிக்க வைரஸ், தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டிருப்பதாலும், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இந்தியாவிலிருந்து ஹாங்காங்கிற்கு விமானத்தில் சென்ற பலருக்கு கரோனா உறுதியானதாலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக இந்தியாவில் உள்ளவர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை ரஷ்யா தற்காலிகமாக இரத்து செய்துள்ளது. மேலும், இந்தியாவை இங்கிலாந்து தனது ரெட் லிஸ்டில் இணைத்துள்ளது. இதனால் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளில் வசிக்காதவர்களோ, பிரிட்டிஷ் குடிமக்களாக இல்லாதவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இங்கிலாந்து செல்லும் தேதியிலிருந்து 10 நாட்கள் முன்புவரை இந்தியாவில் இருந்திருக்க கூடாது. இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்கு சென்று, அங்கு 10 நாட்கள் இருந்துவிட்டு இங்கிலாந்து செல்லலாம். 

 

அதேநேரம் இங்கிலாந்து குடிமக்களோ, இங்கிலாந்தில் வசிப்பவர்களோ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து சென்றால், அவர்கள் 11 இரவுகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த விதிமுறை வரும் 23ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வர இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் விடுமுறை; நெரிசலால் உயிரைப் பணயம் வைக்கும் பயணிகள்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Passengers risking their lives due to congestion

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

“எங்கள் மக்கள் இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள்” - மாலத்தீவு முன்னாள் அதிபர்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Former President of Maldives says Our people want to apologize to Indians

கடந்த ஜனவரி மாதம், லட்சத்தீவு சென்றிருந்த பிரதமர் மோடி, ஆழ்கடல் பகுதியில் நீந்தி பவளப் பாறைகளைப் படம் பிடித்த காட்சிகள் வெளியாகி இருந்தது. அதேபோல் கடற்கரை பகுதியில் அமர்ந்து சிந்திப்பதை போன்ற புகைப்படங்களும் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பாஜகவினரால் 'ட்ரெண்ட்' செய்யப்பட்டது. அதே நேரம் பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மாலத்தீவு அமைச்சர்கள் இருவரும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியா குறித்து அவதூறு கருத்துகளைப் பதிவு செய்தனர். 

இந்த கருத்துகள் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, ‘மூன்று அமைச்சர்களின் கருத்துக்கும் மாலத்தீவு அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்போர் மீது அரசுத் தரப்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாலத்தீவு அரசு விளக்கம் அளித்தது. இதைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு கடந்த 7 ஆம் தேதி 3 அமைச்சர்களையும் தற்காலிகமாகப் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையான நிலையில், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டத்தை ரத்து செய்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்தில், இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களுக்கு மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தற்போது இந்தியாவிற்கு வருகை தந்துள்ள மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய மக்களின் புறக்கணிப்பு மாலத்தீவை மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. நடந்த நிகழ்வுகளுக்காக மாலத்தீவு மக்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய மக்கள் சுற்றுலாவுக்காக மாலத்தீவுக்கு வர வேண்டும்” என்று கூறினார்.