ஐக்கிய அரபு அமீரகத்தில் பத்து வருடத்திற்கான உயரிய கோல்டன் விசா தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா காலகட்டம் மற்றும் பல்வேறு சமயங்களில் சமூக சேவைகள் ஈடுபட்டவர்களை கௌரவப்படுத்தும் வகையில் ஹுமானிடேரியன் பயனிர் என்ற கோல்டன் விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மனிதநேயத்திற்கான இந்த விசாவை ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையைச் சேர்ந்த துபாய் ஈமான் பொதுச் செயலாளர் ஹமீது யாசினுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு வழங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக அரசின் மனிதநேய முன்னோடி என்ற விசாவை பெரும் முதல் தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான விசா வழங்குவதற்கான நிகழ்ச்சி அன்வர் கன்சல்டன்சி நிறுவனத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமீரக பிரமுகர் அலி செய்யது புத்தாவில் அல் மத்துருசி, அன்வர் குழுமம் அப்துல் காதர், டாம் சர்வீஸ் ஷானவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.