ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மாதம் 26ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்தது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்தது. 22 ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது உக்ரைன் மீதான போர்.
இந்தநேரத்தில் உலக அளவில் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது செயின்ட் ஜாவ்லின் படங்கள். ஜாவ்லின் என்பது ஒரு சிறிய ரக ஆயுதம். ரஷ்யாவின் படைகள் பீரங்கியுடன் படையெடுக்க அவற்றைத் தனியொரு ஆளாக உக்ரைன் வீரர்கள் சுட்டு வீழ்த்த பெரிதும் கைகொடுத்து வருவது ஜாவ்லின். ரஷ்யாவின் மிகப்பெரிய பீரங்கி டேங்குகளுக்கு மத்தியில் போராட உக்ரைன் வீரர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தோளடக்க ஏவு கருவியான ஜாவ்லின் அதிகமாக கொரில்லா போரில் பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். அளவில் சிறியது என்றாலும் ரஷ்யாவின் அதிநவீன டி-19 பீரங்கிகளை அழிக்கும் வல்லமை பெற்றது. ஒரு ஜாவ்லினின் விலை சுமார் 1.3 கோடி ரூபாய் எனக்கூறப்படுகிறது. 2,500 மீட்டர் தொலைவிலிருந்து பீரங்கிகளை தாக்கவல்லது. போர்ச்சூழலில் சுமார் 17,000 ஜாவ்லின்களை உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வழங்கியுள்ளது.
இப்படி ஜாவ்லினை நம்பியே போராடி வரும் உக்ரைனில் ஜாவ்லின் பெயரில் நிதி திரட்ட ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் உடைகள், கொடிகள் உள்ளிட்டவை செயின்ட் ஜாவ்லின் படங்களுடன் விற்கப்படுகிறது.