Skip to main content

விமான விபத்து; புதினுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர் மரணம்? - பரபரப்பில் ரஷ்யா

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

wagner chief yevgeny prigozhin passed away jet crash

 

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்குச் சென்ற ஜெட் விமானம் ஒன்று திடீரென வெடித்துச் சிதறி விபத்துக்குள்ளானது. இதில் ஜெட் விமானத்தில் பயணம் செய்த 3 பணியாளர்கள், 7 பயணிகள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஏழு பயணிகளில் ரஷ்ய அதிபருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினும் ஒருவர் என தகவல் வெளியாகியது. மேலும் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்து நிறுவனம் வெளியிட்டுள்ள விமானத்தில் இருந்தவர்களின் உறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் ப்ரிகோஜினின் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை போர் நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி  முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த போரில் ரஷ்யா சார்பில் ரஷ்ய ராணுவத்தினருடன் இணைந்து வாக்னர் குழுவினர் என்ற பெயரில் ஆயுதக்குழு ஒன்று உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வந்தது. இந்தக் குழு ரஷ்ய அதிபர் புதினின் நண்பர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்பவர் தலைமையில் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த போரில் ஈடுபட்ட போது ரஷ்ய ராணுவம் தங்களுடைய வீரர்களைக் கொன்றதாக குற்றம் சாட்டி ரஷ்யாவிற்கு எதிராக கிளர்ச்சியை வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜின் செய்தார். மேலும் ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து புதினை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை சரி செய்தபிறகு, வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின் ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சியை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதாக அறிவித்தார். இந்த நிலையில்தான் தற்போது விமான விபத்தில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி ரஷ்யாவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்