ஹெச்1பி மற்றும் எல்1 விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்குள் வருவதற்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப்.
கரோனா வைரஸ் பரவலால் தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ள சூழலில், கடந்த ஐந்து மாதங்களில் அமெரிக்காவில் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த சூழலில் உள்நாட்டினருக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், H1B, H-2B, H-4, L-1, J-1 உள்ளிட்ட விசா வகைகளின் பயன்பாட்டை இந்த ஆண்டு இறுதி வரை அதிபர் ட்ரம்ப் தடை செய்து அறிவித்தார். அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கான இந்த விசாவில் சுமார் 74 சதவீதம் வரை இந்தியர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் இதனால் பயன்பெறும் லட்சக்கணக்கான இந்தியர்களும், அவர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்களும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியது.
ட்ரம்ப்பின் இந்த முடிவுக்கு பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த சூழலில், அதில் சில தளர்வுகளை அறிவித்துள்ளார் அதிபர் ட்ரம்ப். அதன்படி, ஏற்கனவே இருந்த நிறுவனத்தில் ஏற்கனவே இருந்த பொறுப்புக்கு மீண்டும் வருவதாக இருந்தால் அவர்களுக்கு ஹெச்1பி விசா வழங்கப்படும் என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இதற்காக 5 விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்தபட்சம் 2 விதிகளுக்குட்பட்டு இருந்தால் விசா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெச்1பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய தளர்வுகள், கவலையடைந்திருந்த லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.