சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவான படையினர், ஐ.எஸ். பயங்கரவாதிகள் இடையே நடைபெற்று வரும் சண்டையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன. இந்த உள்நாட்டுச் சண்டையில் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக அமெரிக்காவின் 2,000 வீரர்கள் போரிட்டு வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது. ஆதலால், சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும் “ எனத் தெரிவித்தார். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நிருபர்களிடம் பேசுகையில், 'சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது. அமெரிக்க ராணுவம் சிரியாவில் இருந்து வெளியேறத் தொடங்கிவிட்டது' எனத் கூறினார். அதே நேரம் உலகின் மற்ற பகுதிகளில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கெதிராக அமெரிக்கா தொடர்ந்து போராடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.