அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அதேபோல் அமெரிக்காவின் 49 ஆவது துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும் பதவியேற்றுக் கொண்டார்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஒபாமா, முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவையொட்டி வாஷிங்டனில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 25,000 வீரர்களும், ஆயிரக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பின்னணி...
1942- ஆம் ஆண்டு பென்சில்வேனியாவில் எளிய குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பிறந்தார் ஜோ பைடன். சிறு வயதில் திக்கிப் பேசக்கூடியவராக இருந்த பைடன், நீண்ட கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைப் படித்து அந்த இயல்பை மாற்றிக்கொண்டார். பள்ளிக் காலத்தில் சிறு சிறு பணிகளைச் செய்து அதன் மூலம் கிடைத்தப் பணத்தை தன் கல்விக்காகச் செலவிட்டார். 1972- ஆம் ஆண்டு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு, மிக இளம் வயதிலேயே செனட் உறுப்பினரானார் பைடன். 36 ஆண்டு காலம் செனட் உறுப்பினராக இருந்தவர், ஆம்ட்ராக் ரயில் மூலம் வாஷிங்டனுக்குச் சென்று வந்தார். ஒபாமா அதிபராக இருந்தபோது துணை அதிபராகவும், அரசியல் ஆலோசகராகவும் ஜோ பைடன் செயல்பட்டார்.