உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று முன்தினம் காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகின்றது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு எதிரான தீர்மானத்தை ரஷ்யா தோற்கடித்துள்ளது. அமெரிக்கா, அல்பேனியா கொண்டுவந்த தீர்மானத்திற்கு 11 நாடுகள் ஆதரவளித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய 3 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
15 நாடுகள் கொண்ட கவுன்சிலில் தீர்மானத்துக்கு எதிராக நிரந்தர உறுப்பினரான ரஷ்யா வாக்களித்தது. தீர்மானம் குறித்து 'உலக அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்த்தவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது' என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேபோல் இந்தியா சார்பில், 'நடுநிலைமையைப் பேணிக் காக்கும் வகையில் ரஷ்யாவிற்கு எதிரான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை' எனத் தெரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்யாவுக்கு மிகவும் நெருக்கமான நாடாக இருக்கும் சீனாவும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை.