உக்ரைன் ஜபோரிஸ்யா அணுமின் நிலையத்தின் அருகே ரஷ்யாவால் நடத்தப்படும் தொடர் தாக்குதல் குறித்து இந்தியா தனது கவலையை தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்ய இடையே கடந்த ஆறு மாதங்களாக போர் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில் உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். உக்ரைனில் பயின்று வந்த இந்திய மாணவர்களையும் இந்திய அரசு மீட்டது.
இந்நிலையில் தற்போது, உக்ரைனின் ஜபோரிஸ்யா அணுமின் நிலையத்தின் அருகில் தொடர்ச்சியாக ரஷ்ய ராணுவம் குண்டுகளை வீசி வருகிறது.
இதன் காரணமாக ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய தூதரான ருச்சிரா கம்போஜ் உரையாற்றியதாவது "உக்ரைனின் ஜபோரிஸ்யா அணுமின் நிலையத்தின் அருகே ரஷ்யா தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்தியா கவலை தெரிவிக்கிறது. அணுமின்நிலையத்தின் பாதுகாப்பு கருதி இரு தரப்பும் சமாதான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறது" என்று கூறியுள்ளார். மேலும் அணுமின் நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் உக்ரைனும் ரஷ்யாவும் பரஸ்பர சமாதான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.