ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் இன்று ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அமைச்சர்களை தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
குல் ஆகா என்பவர் நிதி அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். சதர் இப்ராஹிம், உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் நஜிபுல்லா உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் மீட்புப்பணிகளுக்காக சென்ற விமானம் கடத்தப்பட்டதாக அந்தநாட்டு அமைச்சர் கூறியதாக தகவல் வெளியானது.
உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் யெவ்ஜெனி யெனின், "கடந்த ஞாயிற்றுக்கிழமை, எங்கள் விமானம் கடத்தப்பட்டது. உக்ரைன் நாட்டு மக்களை மீட்பதற்கு பதிலாக, அந்த விமானம் அடையாளம் தெரியாத பயணிகளோடு ஈரானுக்குச் சென்றுள்ளது. உக்ரைன் மக்களால் விமான நிலையத்திற்கு வரமுடியாததால், எங்களது அடுத்த மூன்று மீட்பு முயற்சிகள் வெற்றியடையவில்லை" என தெரிவித்ததாக ரஷ்ய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில், உக்ரேனிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், உக்ரைன் விமானங்கள் எங்கும் சிறைபிடிக்கப்படவில்லை என்றும், சிறைபிடிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் வரும் செய்திகள் தவறானவை என்றும் தெரிவித்ததாக உக்ரைன் செய்தி நிறுவனமான ஆர்பிசி கூறியுள்ளது.