ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் மீதான அழுத்தத்தை அதன் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஏராளமானோர் ராஜினாமா செய்து வருகின்றனர்.
ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய கையோடு, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் முக்கியத் தலைமை நிர்வாகிகளை நீக்கியதுடன் சுமார் 50% அளவிற்கு திடீர் ஆட்குறைப்பு செய்தார். இதனால், எஞ்சியிருந்த ஊழியர்களின் வேலைப்பளு பன்மடங்கு உயர்ந்துவிட்டது. எலான் மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் ட்விட்டரைப் புதுப்பிக்கும் பணியை முடிப்பதற்கு அந்நிறுவனத்தில் பணிபுரியும் பொறியாளர்கள் நாளொன்றுக்கு 11 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பணியில் ஏற்பட்ட அழுத்தம், வேலை நிரந்தரமின்மை அச்சம் காரணமாக பெருமளவு ஊழியர்கள் ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். தங்கள் ட்விட்டர் பக்கத்திலேயே இது தான் கடைசி வேலை நாள் என்று குறிப்பிட்டு விட்டு விலகும் போக்கு ட்விட்டர் நிறுவனத்தில் அதிகரித்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளும், எலான் மஸ்க் தங்களையும் பணிநீக்கம் செய்யக் கூடும் என்று அஞ்சி அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் ‘#lovewhereyouworked’ என்ற ஹேஷ்டேக்குடன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்கள் பதவி விலகலை அறிவித்து வருகின்றனர்.