ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவரும் நிலையில், அங்கு அவ்வப்போது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று வருகிறது. அண்மையில் ஒருவார இடைவெளியில் இரு வெவ்வேறு மசூதிகள் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்-கே தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்தநிலையில், இன்று (02.11.2021) ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ மருத்துவமனை நுழைவு வாயிலில் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. மேலும், குண்டு வெடித்த இடத்திலிருந்து துப்பாக்கி சத்தமும் கேட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்திற்கு தலிபான்களின் சிறப்பு படை விரைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
இதற்கிடையே, ஐஎஸ்-கே அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் சிலர், மருத்துவமனைக்குள் நுழைந்து பாதுகாப்பு படைகளுடன் சண்டையிட்டார்கள் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக ஆப்கானிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ ஊடகம் கூறியுள்ளது.