அதிபர் தேர்தல் நெருக்கும் சமயத்தில் கரோனா தடுப்பூசியை ட்ரம்ப் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவி பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல பெரிய நாடுகளே இதைக் கட்டுப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன. உலகம் முழுக்க பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. குறிப்பாக அமெரிக்காவில் ட்ரம்ப் தலைமையிலான அரசு கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. இது வரவிருக்கிற அதிபர் தேர்தலிலும் எதிரொளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ட்ரம்ப் அதிரடியான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலானது வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய அதிபரான ட்ரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜோ பைடன் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட இருக்கிறார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாத காலமே இருப்பதால் தற்போதே தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்க நோய்த்தொற்று தடுப்பு மைய இயக்குநர் ராபர்ட் டெல்ஃபீல்டு, கரோனா தடுப்பூசி நவம்பர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும், அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்கக் கோரி கடந்த மாதத்தின் இறுதியிலேயே மாகாண கவர்னர்களுக்கு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.