அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தொடக்க விழாவில் உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்துள்ள ட்ரம்ப், தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்துள்ளதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பைடனின் வெற்றிக்கு எதிராகவும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவின் மிகமுக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவரும் சூழலில், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தொடக்க விழாவில் ட்ரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்த 4 ஆண்டுகள் ஆச்சரியமானவையாக இருந்தது. நாங்கள் இன்னும் 4 ஆண்டுகளுக்கு இருக்க முயற்சி செய்கிறோம். இது இல்லையெனில் அதற்கு அடுத்த 4 ஆண்டுகளில் மீண்டும் சந்திப்போம்" எனத் தெரிவித்துள்ளார். 74 வயதான ட்ரம்ப், இந்த தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டாலும், அடுத்த அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவதனை சூசகமாக அறிவித்துள்ளார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.