இளம்பெண் ஒருவரின் கணக்கை டிக்-டாக் நிறுவனம் முடக்கிய ஒரு விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் ஃபெரோசா அசிஸ் சமீபத்தில் ஒரு டிக்-டாக் வீடியோவை வெளியிட்டிருந்தார். பெண்கள் மேக்அப் போடுவது குறித்த 40 விநாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோவில் சீனாவில் இஸ்லாமியர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக விமர்சனம் செய்துள்ளார். அந்த வீடியோவை சுமார் 1.4 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும், 5 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில், ஃபெரோசா அசிஸின் டிக்டாக் கணக்கை அந்நிறுவனம் முடக்கியது.
இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியதால் அவரது கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம்சாட்டியதால் இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள டிக்டாக் நிறுவனம், ‘சீன விவகாரம் குறித்து பேசியதற்காக அவருடைய டிக்டாக் கணக்கு தடை செய்யப்படவில்லை. அவருடைய முந்தைய வீடியோவில் ஒசாமா பின்லேடன் குறித்து வீடியோ பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனால், அவருடைய கணக்கு முடக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.