சீன செயலியான டிக்டாக் பயனர்களின் தகவல்களைச் சீனாவிற்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, இந்தியாவில் இந்த செயலி கடந்த 2020ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, அமெரிக்க மக்களின் தனிநபர் விபரங்களை டிக்டாக் செயலி மூலம் சீனா அரசு உளவு பார்க்கின்றன என்று தொடர் புகார்கள் எழுந்தன. இந்த புகாரை தொடர்ந்து, அமெரிக்க சட்டவிதிகளின்படி டிக்டாக் செயலிக்கு ஜோ பைடனின் அரசு சமீபத்தில் தடை விதித்தது. இந்த தடை நேற்று (19-01-25) அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தது.
இதற்கிடையில், இந்த தடையை எதிர்த்து அமெரிக்கா உச்சநீதிமன்றத்தில் டிக்டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இந்த சூழலில், நேற்று டிக்டாக் செயலி தடை அமெரிக்காவில் அமலுக்கு வந்தது. அதன்படி, அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்தப்பட்டு, ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக்டாக் செயலி இன்று (20-01-25) மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப், இன்று காலை அமெரிக்கா அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்த சூழ்நிலையில், டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக டிரம்ப் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் சேவையை மீண்டும் தொடங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.