Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தென்கொரியாவில் தமிழர்கள் முன்னெடுத்த ஒத்திசைவு போராட்டம்! 

Published on 10/04/2018 | Edited on 10/04/2018
Busan Protest


 

தென் கொரியாவின் பல்வேறு நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் சிறு சிறு குழுக்களாக சேர்ந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், மீத்தேன் திட்டத்தை எதிர்த்தும் ஸ்டெரிலைட் ஆலைக்கெதிராகவும் இன்ன பிற இடர்கள் களைய கொரியா வாழ் தமிழர்களின் சார்பாக தங்களது ஒத்திசைவை ஒருமுகமாக கடந்த 08-04-2018 ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
 

வடக்கே சீயோல் முதல் தெற்கே புசான் வரை, சியோல் (Seoul), சுஒன் (Suwon), தேஜான் (Daejeon), தேகு (Daegu), பூசான் (Busan), சுன்ச்சோன் (Suncheon), கொஜே தீவு (Geoje), சொஞ்சூ (Jeonju), சொனான் (Cheonan) மற்றும் உல்சான் (Ulsan) ஆகிய இடங்களில் நடைபெற்றன. நிகழ்வில் பாதகைகள் ஏந்தியும், ஒத்திசைவின் உறுதிமொழி ஏற்றும் தீர்மானங்களை வாசித்து ஒப்புமையும் செய்தனர். 
 

ஒருமித்த உறுதிமொழியுடன் தங்களது ஒத்திசைவை துவங்கினர். 

 

Daegu Protest


 

உறுதிமொழி
 

அறத்தின் வழி வந்த மூத்தோர் நாங்கள் 
அறிவு உலகின் விதைகள் நாங்கள் 
தீமையின் கொடுநாவை பொசுக்கும் வேங்கைகள் 
உயிர்கள் அனைத்திற்கும் தமிழர் காவல் 
ஞானியர் பேரொளியும் இயற்கையின் வலிமையும் 
உலகோர் நட்பும் எமக்கு அரணாய் அமையும்! 
 

பின்பு விளக்கமான தீர்மானங்களை வாசித்து நிறைவு செய்தனர். 

 

Daejeon Protest


 

தீர்மானங்கள் 
 

1. அனைத்து வகையான அக மற்றும் புற அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு நேர்மையாகயாகவும் மனிதத் தன்மையுடனும் செயல்படக்கூடிய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை பெருமதிப்பிற்குரிய உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.1970 முதல் நீதிமன்ற தீர்வை எதிர்நோக்கியிருக்கும் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியபோதும், பலமுறை தமிழ்நாட்டிற்கான நீர் பங்கீட்டின் அளவு குறைக்கப்பட்டபொழுதும் (370 டி.எம்.சி என்ற 1924 ஆம் நிலையிலிருந்து குறைத்து 177 டி.எம்.சி என்ற இன்றைய நிலை வரை) தமிழ்நாட்டு மக்கள் குறைந்தபட்ச நீதியாவது நிலைநாட்டப்படும் என்று காத்திருந்தவேளையில் அந்த நம்பிக்கையும் தற்போதைய நடுவண் அரசின் நீதிசார் செயல்பாடுகள் மூலம் தகர்க்கப்பட்டியிருப்பதாய் உணர்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக கர்நாடகத்தின் குடிநீர்த் தேவையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டின் குடிநீர் தேவையை கண்டுகொள்ளாத நீதி நிலைமை மற்றும் நீதி பரிபாலனத்திற்கு சற்றும் பொருந்தாத வார்த்தை விளையாட்டு இவற்றையெல்லாம் கண்டு அறச்சீற்றம் அளவு கடந்து மேலிட்டபொழுதும், நீதிமன்றமே மக்களின் உரிமையை நிலைநாட்டும் இறுதிப்புகலிடம் என்ற மக்களாட்சியின் அறநிலைக்கேற்ப நீதிமன்றத்தை கனத்த இதயத்துடன் வலியுறுத்துகிறோம்.

 

Geoje-do Protest


 

2. காவிரி இடர்பாட்டிற்கு - அரசியல் வழித் தீர்வு இல்லை. நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவதே சிறந்த வழி. ஆகவே நீதிமன்ற தீர்வை சற்றும் தாமதிக்காது நடுவண் அரசு செயற்படுத்த வேண்டும். எப்படி உள்நாட்டு இடருக்கு படைத்தீர்வு என்பது முரண்பட்டதோ அவ்வாறு முரண்பட்டதே இருமாநில பேச்சு வார்த்தை அல்லது அரசியல் தலைமைகள் வழி தீர்வு என்பதை காலம் நமக்கு உணர்த்தி நிற்கிறது. தலைமுறைகள் கடந்து நடைபெறும் அரசியல் தன்னலம் கருதிய நடுவண் அரசின் (அரசுகளின்) நடுநிலை வழுவல், இழுத்தடிப்புகள், மாநில அரசுகளின் அதிகார வரம்பு பறிபோதல் குறித்த - கருத்தில் கொள்ளத்தக்க அச்சம், பயனற்ற அரசியல் விளையாட்டுக்கள், அது சார்ந்த வன்முறை வெறியாட்டங்களால் விளைந்த உயிர் மற்றும் சொத்து இழப்புகள் ஆகியவை அரசியல் தலைமைகள் வழி தீர்வு இல்லை என்ற நிலையை பொது நிகழ்வுகள் குறித்த கவலைப்பட நேரமில்லாமல் அன்றாட வாழ்வை நகர்த்தும் எளிய மக்களுக்கும் உணர்த்தி நிற்கிறதென்றால் அது மிகையாகாது. இதுகாறும் தமிழ் நட்டு மக்கள் சந்தித்த உயிர் மற்றும் சொத்து இழப்புகள் என்பது கர்நாடகம் சந்தித்ததைவிட மிகவும் அதிகம் என்பதற்கு சமீபத்தில் நடந்த பெங்களூரு பேருந்து எரிப்பு நிகழ்வுகளே சான்று.

Seoul protest



3. காவிரி போன்ற நதிநீர் இடர்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடைமடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு நடுவண் அரசு தாராள நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு மின் நுகர்வு மின்னுணர்வு (electronic sensor based Smart farming) அடிப்படையிலான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த உதவும் பாசன தொழில் நுட்பம், குறைந்த நீர்கொண்டு செய்யும் பயிர் தொழில்நுட்பம், நிலத்தடி நீர் அதிகரிக்கும் அமைப்புகளை அமைத்தல், மழைநீர் சேமிக்கும் பழைய அலகுகளை சரிசெய்தல் மற்றும் உரிய இடங்களில் அவ்வாறான புதிய அலகுகளை கட்டமைத்தல் போன்றவற்றை நடுவண் அரசு உடனடியாக செய்ய வேண்டும். இதில் முதல் அங்கமாக இதுகாறும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடி இழப்பீடு மற்றும் இன்றைய விவசாய நெருக்கடி சீர்செய்யப்படும்வரை அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மாதாந்திர உதவித்தொகையும் வழங்க வேண்டும். இந்த தீர்மானம், தமிழ்நாட்டின் விவசாய உற்பத்திப்பொருட்கள் மற்றும் இயற்கை வளங்கள் பக்கத்துக்கு மாநிலங்களுக்கும் பயன்பட்டு வருகிறது என்ற உண்மை நிலையை அடிப்படையாகவே வைத்தே நிறைவேற்றப்படுகிறது. மேலும், நீர் குறைவு மற்றும் போதிய வருமானமின்மை போன்ற காரணங்களால் விவசாயம் வயதானவர்களுக்கான வேலையாக மாறிப்போன சூழலில் வளர்ந்த நாடுகள் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துகின்றது என்பதை அனைத்து நிலைகளிலும் (புள்ளி) தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் தற்போதைய நடுவண் அரசு அறிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. நாங்கள் வாழும் தென்கொரிய நாடு இத்தகைய விவசாய தொழில்நுட்பம் வழங்கும் திட்டங்களை அரசின் முதல் முன்னுரிமை திட்டங்களில் ஒன்றாக அறிவித்து செயல்படுத்துவத்துகிறது என்பதை நம் நாட்டின் துறைசார் வல்லுனர்களும் அரசும் அறிந்திருப்பர் என்பதில் எங்களுக்கு ஐயமில்லை.

 

Suncheon Protest


 

4. தமிழ் நாட்டின் உணவு உற்பத்தி நடைபெறும் மிகமுக்கிய இடமான தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதியில் கைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை நடுவண் அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். உலக நாடுகள், தமது காடுகள் மற்றும் உணவு உற்பத்திக்கான இடங்களைப் பாதுகாத்து பாலைவனங்கள் மற்றும் கடலின் அடிப்பரப்பு ஆகியவற்றில் கைட்ரோகார்பன் உள்ளிட்ட எரிபொருட்களை தேடும்பொழுது விளைநிலத்தின் மேற்பரப்பை பாதிக்கும் இந்த திட்டத்தை முன்னெடுப்பது தற்கால அறிவியல் முன்னேற்றம் செல்லும் பாதைக்கு நேரெதிரானது. நிற்க!, காற்று மற்றும் சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பிக்கதக்க வழிகளிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதில் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளான டென்மார்க் மற்றும் சுவிடனை மிஞ்சி ஒரு இந்திய மாநிலம் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று உலகமே வியந்து பார்க்கும்வேளையில், இந்தமாதிரி திட்டங்களை தமிழ்நாட்டிற்கும் இந்தியாவின் மற்ற உணவு உற்பத்தி இடங்களில் முன்னெடுப்பது முற்றிலும் தேவையற்ற மற்றும் மாசுபாட்டை நாமே விலைகொடுத்து வாங்கும் விடயமாகவே நாம் கருதுகிறோம்.

 

Suwon Protest


 

5. காற்று மற்றும் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை விளைவிக்கும் சல்பர் டை ஆக்சைடு வாயு மற்றும் காப்பர் உள்ளிட்ட உயர் எடை கொண்ட தனிமங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கும் இசுடெர்லைட் ஆலை உடனடியாக மூடப்பட வேண்டும். இந்த ஆலை தூத்துகுடியில் சட்ட திட்டங்களுக்கு மாறாக மக்கள் வாழ்விடங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டு தற்பொழுது மேலும் விரிவாக்கம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. கொடுநோய்களின் தாக்கம் குறித்த சுற்றுப்புற மக்களின் சோகக்குமுறல்கள், 1998 முதல் கொடுக்கப்பட்டிருக்கும் நடுவண் அரசின் சுற்றுப்புற பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இந்த ஆலையின் மாசுக்கட்டுப்பாடு தொடர்பான அறிக்கைகள், திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின் சமூக மருந்தியல் துறை வெளியிட்ட ஆலையின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களின் உடல் நிலை குறித்த ஆய்வறிக்கைகள் ஆகியவைகள் இசுடெரிலைட் கண்டிப்பாக மூடப்படவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. பொதுவாக கனிம வேதிப்பொருட்களை அடிப்படையாக கொண்ட ஆலைகளின் கனிம தனிமங்கள் கொண்ட கழிவுப்பொருட்களை கண்டிப்பாக பிரித்து எடுக்க வேண்டியிருக்கிறது ஏனென்றால் கரிம பொருட்கள் போல் அவைகள் காலப்போக்கில் சூரிய ஒளி, ஈரப்பதம் மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றலோ அல்லது அவற்றின் ஒட்டுமொத்த சேர்க்கையாலே வேறு பாதிப்பில்லாத பொருட்களாக மாற்றுவது கடினம். கரிம வேதிப்பொருட்கள் எவ்வளவு சிக்கலான மூலக்கூறு அமைப்பை கொண்டிருந்தாலும் அவைகள் மேற்சொன்ன காரணிகளால் காலப்போக்கில் ஆக்சிசனேற்றம் அல்லது ஒடுக்கமாகி நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகிய எளிய மூலக்கூறுகளாக மாற்றப்பட்டு அழிக்கப்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது. இந்த கனிம வேதியியல் சிக்கலின் காரணமாகத்தான் அணுக்கழிவுகள் போன்ற விடயங்கள் நம்மை காலத்திற்கும் அச்சுறுத்துகிறது. இதுகாறும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை நடுவண் மற்றும் மாநில அரசுகள் தடுக்காத காரணத்தாலும், விட்டுக்கொடுப்பில்லாத சட்டங்களால் மாசை அரசும் நீதிமன்றமும் கட்டுப்படுத்துவதாய் சொல்லப்படும் திருப்பூர் போன்ற நாட்டின் பிற பகுதிகளில் முன்னேற்றமில்லாத காரணத்தாலும் சுழிய (Zero Discharge) மாசில்லாத தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க ஆலையை வலியுறுத்தி பாதிப்பில்லமல் செய்வோம் என்கின்ற அரசு மற்றும் தொழில் வல்லுநர்கள் நிலைப்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. போபால் விசவாயுதாக்குதலுக்கு ஆளான மக்களுக்கு இன்றளவும் நாம் நீதி வழங்கவில்லை என்பதும் அரசு அதற்கு காரணமானவர்களை தண்டனையில் இருந்து தப்ப விட்டது என்ற மக்கள் நடுவில் நிலவும் குற்றச்சாட்டும் இங்கு நினைவுகூறத்தக்கது.

 

Ulsan Protest


 

6. தமிழகத்தின் தேனியின் அருகே பெட்டிபுரம் மலையைக் குடைந்து அமைக்கப்படும் நியூட்ரினோ திட்டம் குறித்து மக்களுக்கு எழுந்திருக்கும் ஐயம் முறையாக தீர்க்கப்படும்வரை அந்த திட்டத்தை முன்னெடுத்து செல்வதை அரசு சற்று நிறுத்தி தீவிர மறுசிந்தனை செய்ய வேண்டும். அயனியாக்கும் ஆற்றலில்லாத, நித்தம் நம் உடலை, மற்ற பொருட்களை ஊடுருவிச்செல்லும் கற்பனைக்கே எட்டாத மீச்சிறு வடிவிலான நியூட்ரினோ துகள்களால் எந்த ஆபத்துமில்லை என்பதே பொதுவான அறிவியல் புரிதலாக இருக்கிறது. கருந்துளைகளிலிருந்து வரும் இந்த துகள்களை பிடித்து ஆய்வு செய்வதன் மூலம் அண்டத்தைப் பற்றியும், உலகம் பிறந்த கதையையும், நட்சத்திரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், எப்போது உலகம் அழியக்கூடும் போன்ற கேள்விக்கும் விடையை கண்டறியலாம் என்பதே இந்திய மற்றும் உலக அரசுகளும் அறிவியலாளர்களும் சொல்லும் பொதுவான பதில். ஆனால் இந்த பொதுவான விடயத்திற்கு உலக வல்லரசுகளும் வளரும் இந்தியாவும் பெரும் செல்வத்தை செலவிட்டு, தனியே ஆய்வகங்களை நிறுவி ஆய்வு செய்யமுற்படுவது மனிதகுலம் குறித்து அக்கறை கொண்ட உலக அரசியல் மற்றும் அறிவியல் அறிஞர்களுக்கு இதன் இறுதி நோக்கம் பற்றிய பெருத்த சந்தேகம் எழுப்பாமலிருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக இந்தியாபோன்று மக்களாட்சி இன்னும் உரிய வளர்ச்சிநிலையை எட்டாமல், அரச அதிகாரம் சிற்றூர் முதல் விமான நிலையம் வரை அதன் காவட்படைகளைக்கொண்டு காக்கப்படும் நிலையிலும்,நடுவண் மற்றும் மாநில அரசுகளானது பன்னாட்டு உறவு, நாட்டு பாதுகாப்பு மற்றும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற காரணத்தைக்காட்டி பலமுறை மக்களுக்கு உரிய பதிலோ நிவாரணமோ, நீதியோ வழங்காமல் நழுவும் நிலை இருப்பதால் நாமும் இந்த நியூட்ரினோ திட்டத்தை சந்தேக கண்கொண்டே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். மேலும் இந்த திட்டத்திற்கு தேவைப்படுவதாய் அறிவியலாளர்கள் சொல்லும் அதீத மின்னாற்றல், தண்ணீர், கதிரியக்க தன்மை கொண்ட கனநீர் (டியூட்ரியம்), குளிர்விக்கும் எண்ணெய் (30 ஆயிரம் டன்கள்) ஆகியவை குறித்து சிந்திக்கும்பொழுது அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வில் இது ஒரு பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் என்ற ஐயம் அறிவார்ந்த சமூகமான எமக்கும் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
 

இந்த கூடுதல்களை கொரியா தமிழ் தளம் ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.

 

சார்ந்த செய்திகள்