சிங்கப்பூர் பிரதமர் லீக்வானுக்கு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்பொழுது அங்கிருந்த சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், ''கடல் கடந்து சிங்கப்பூர் வந்தது போன்ற உணர்வே இல்லை. தமிழ்நாட்டில் இருப்பதைப் போலவே உணர்கிறேன். ஓய்வு பெற்ற ஐ .ஏ.எஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் எழுதிய 'ஒரு பண்பாட்டின் பயணம்' என்ற நூலை அண்மையில் வெளியிட்டேன். தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் நாம் எத்தகைய பெருமையை அடைய வேண்டும் என்பதற்கு அடிப்படையான நூல். அதில் சிந்து பண்பாடு என்பது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது. அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ் மொழி. வாழ்ந்த மக்கள் சங்க கால தமிழர்களின் மூதாதையர் என்பதை நிறுவி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீக்வானுக்கு நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்திருக்கிறோம். இது தமிழ்நாட்டின் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். அங்குள்ள பரவாக்கோட்டை, கூப்பப்பாச்சிகோட்டை, திருமகோட்டை, உள்ளிக்கோட்டை, மேல திருப்பலாங்குடி, கீழ திருப்பலாங்குடி, ஆலங்கோட்டை, நெடுவாக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் சிங்கப்பூருக்கும் தொடர்பு உண்டு என்பதை நான் அறிவேன். இந்த கிராமங்களில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். எனவே லீக்வானின் பெயரில் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியோடு மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.