இரட்டை கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்த அமெரிக்கா, அங்கிருந்த தலிபான் ஆட்சியை அகற்றி, ஜனநாயக ஆட்சியை நிறுவினர். இதன்பின்னர் ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படைகளுக்கும், தலிபான்களுக்கும் 20 வருடங்களாக தொடர் சண்டை நடைபெற்றுவந்தது. இந்த சண்டையின்போது தலிபான்கள், ஆப்கன் இராணுவத்தின் மீதும், அமெரிக்கப் படைகள் மீதும் அவ்வப்போது தற்கொலை தாக்குதல்களை நடத்திவந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியோடு அமெரிக்கப் படைகள் ஆப்கனைவிட்டு வெளியேறினர்.
இதனையடுத்து தலிபான்கள், ஆப்கானிஸ்தான் இராணுவத்தை வீழ்த்தி அந்தநாட்டைக் கைப்பற்றினர். இந்தநிலையில் தலிபான்கள், அமெரிக்கப் படையினர் மீதும், ஆப்கன் இராணுவத்தின் மீதும் தற்கொலை தாக்குதலை நடத்தியவர்களின் குடும்பத்தினருக்கு நிலம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
தலிபான்களின் உள்நாட்டு அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி, நேற்று (19.10.2021) தற்கொலை தாக்குதலை நடத்தியவர்களின் உறவினர்களை காபூலில் உள்ள ஒரு ஹோட்டலில் சந்தித்துள்ளார். அப்போது அவர், தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை இஸ்லாமின் கதாநாயகர்கள் என்றும், நாட்டின் கதாநாயகர்கள் எனவும் கூறியதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு நிலம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்தக் கூட்டத்தின் முடிவில் தற்கொலை தாக்குதல்களை நடத்தியவர்களின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் ஆப்கனிக்களையும் (ஆப்கன் நாணயம்) சிராஜுதீன் ஹக்கானி வழங்கியுள்ளார்.