ஹிஜாப் அணியாதவர்களை கண்டறிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சில இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஈரானில் கடந்த ஆண்டு மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு நாங்கள் இனி ஹிஜாப் அணியமாட்டோம் என தீயிட்டுக் கொளுத்தினர். இந்தப் போராட்டத்தில் 300 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், அதில் 40 பேர் சிறுவர்கள் எனவும் ஐ.நா தெரிவித்திருந்தது.
அதேபோல் பாகிஸ்தானிலும் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவது கட்டாயம் என கடந்த மாதத்தில் உத்தரவிடப்பட்டது. அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும். அப்படி ஹிஜாப் அணியாத மாணவிகள் மீது கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கலாம் என அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஈரானில் பொதுவெளியில் ஹிஜாப் அணியாதவர்களை கண்டறிய கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர், பொதுஇடங்களிலும் சாலைகளிலும் கேமிராக்கள் மூலம் ஹிஜாப் அணியாதவர்கள் கண்டறியப்படுவார்கள். ஹிஜாப் சட்டத்தை மீறுபவர்களுக்கு முதலில் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடப்படும் என்றும் மேலும் மேலும் அவர்கள் அக்குற்றத்தை செய்தால் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் கூறுகின்றனர்.