ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான ஜாக் மா, ஆசிய நாடுகளுக்கு 18 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் 2,10,000 கரோனா வைரஸ் சோதனைக் கருவிகளையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது. ஏழை, பணக்கார நாடுகள் வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வரும் இந்த கரோனா வைரசைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தங்களால் முடிந்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அலிபாபா நிறுவனத்தின் நிறுவனரும், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான ஜாக் மா, தனது அறக்கட்டளை மூலம் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார்.
அந்தவகையில் இத்தாலி, ஈரான், ஜப்பான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு மாஸ்க், கரோனா பரிசோதனை கருவி ஆகியவற்றைத் தனது அறக்கட்டளை மூலமாக வழங்கியிருந்தார் ஜாக் மா. மேலும், 54 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 11 லட்சம் கரோனா பரிசோதனை கருவிகள், 60 லட்சம் மாஸ்க்கள், மருத்துவர்களுக்கு 1000 பாதுகாப்பு உடைகள் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஆசிய நாடுகளுக்காக 18 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் 2,10,000 கரோனா வைரஸ் சோதனைக் கருவிகளையும் வழங்குவதற்கு தயார்ப்படுத்தியுள்ளது ஜாக் மாவின் அறக்கட்டளை. அவசரக் காலத்தில் ஜாக் மாவின் இந்த உதவியை பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர்.