உலகின் அரியவகை உயிரினங்களில் ஒன்றான வெள்ளை ஒட்டகச்சிவிங்கி இனத்தின் கடைசிப் பெண் ஒட்டகச்சிவிங்கி கொல்லப்பட்டது.
உலகின் மிக அறிய வகை வெள்ளை ஒட்டகச்சிவிங்கியானது ஆப்பிரிக்காவின் காடுகளில் வசித்து வருவது கடந்த 2017 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மொத்தம் மூன்று வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளே இந்த இனத்தில் இருந்து வந்தது. இதில் தற்போது இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட நிலையில், எலும்புக்கூடாகக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் இவை வேட்டையாடப்பட்டிருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. தாயும் அதன் குட்டி ஒன்றும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரே ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கி மட்டுமே உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
அல்பினிசத்திலிருந்து சற்று வேறுபட்ட லூசிசம் எனப்படும் ஒரு மரபணு நிலையைக் கொண்டிருக்கும் இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகளின் தோல் பகுதியில் உள்ள செல்களில் நிறமி உருவாவதைத் தவிர்க்கிறது. ஆனால் கண்கள் போன்ற பிற உறுப்புகள் சாதாரண நிறத்திலேயே இருக்கும். அழிவின் விளிம்பிலிருந்த இந்த வகை ஒட்டகச்சிவிங்கிகள் தற்போது கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதன் மூலம் அந்த இனத்தின் கடைசி உயிர் மட்டும் தற்போது ஆப்பிரிக்கக் காடுகளில் தனித்து விடப்பட்டுள்ளது.