கரோனா வைரஸ் பாதிப்பால், பெரும்பாலான சீனர்கள் இறைச்சிகளைச் சாப்பிட தயக்கம் காட்டி வரும் சூழலில், இதனைப் பயன்படுத்தி போலி இறைச்சிகளை அறிமுகப்படுத்தி காசு பார்த்து வருகின்றன ஸ்டார்பக்ஸ், கேஎப்சி போன்ற அமெரிக்க நிறுவனங்கள்.
சீனாவின் வுஹான் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் இன்று உலகமும் முழுவதையும் புரட்டிப் போட்டுள்ளது. நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் இந்த வைரஸைக் கட்டுப்படுத்த இதுவரை எந்தத் தடுப்பு மருந்துகளும் கண்டறியப்படவில்லை. சர்வதேச நாடுகள் அனைத்தும் இந்த வைரஸ் தாக்குதலால் முடங்கிப்போயுள்ள சூழலில், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் இந்த வைரஸ் பரவலுக்குச் சீனாவைக் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் சீனா இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தச் சூழலில், வௌவால், கடல் பிராணிகள் வழியாகத்தான் கரோனா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியது என்ற செய்திகளால் சீனர்கள் மத்தியில் இறைச்சி உண்பதற்கான ஆர்வம் குறைந்துள்ளது.
பெரும்பாலான சீன மக்கள் இறைச்சிகளைத் தவிர்த்து வருகின்றனர். இந்தச் சூழலில், ஸ்டார்பக்ஸ், கேஎப்சி போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சீன சந்தையில் போலி இறைச்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இறைச்சியைப் போலச் சுவையும், தோற்றமும் தரக்கூடிய தாவரம் சார்ந்த உணவு வகைகளை ' ஃபேக் மீட்' (Fake Meat) என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளன இந்த உணவகங்கள். சீனாவில் செயல்படும் சுமார் 4,200 ஸ்டார்பக்ஸ் கிளைகளில் ஓட்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த 'ஃபேக் மீட்' விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல சீனாவில் உள்ள கேஎப்சி உணவகங்களில் ஃபேக் சிக்கன், ஃபேக் நக்கெட்ஸ் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன. இந்தப் புதிய வகை உணவுகளைச் சீனர்கள் அதிகளவில் விரும்பி உண்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.